2019 தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்தினால் பாஜக வெற்றி பெறாது: மாயாவதி

2019 தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்தினால் பாஜக வெற்றி பெறாது: மாயாவதி
2019 தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்தினால் பாஜக வெற்றி பெறாது: மாயாவதி

2019 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்தினால் பாஜக வெற்றி பெறாது என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறினார்.

உத்தரப்பிரதேசத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 14 மேயர் பதவிகளில் பாஜகவும், 2 மேயர் பதவிகளில் பிஎஸ்பியும் வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, "நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி. தற்போது எங்களுக்கு தலித் மக்கள் மட்டுமல்லாமல் சிறுபான்மையினர், பொதுப்பிரிவினர் என அனைவரும் ஆதரவு அளிக்கின்றனர்.

நாங்கள் ஆட்சி செய்தபோது அது அனைவருக்குமான ஆட்சியாக இருந்தது. அதுவே தற்போது எங்களுக்கு வெற்றியை அளித்துள்ளது. தேர்தல் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்தது போல அமையவில்லை. அதற்கு முக்கியக் காரணம் ஆளும் பாஜகதான். சட்டப்பேரவைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து தற்போது உள்ளாட்சித் தேர்தலிலும், பாஜக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்துள்ளது.

பாஜகவினர் உண்மையானவர்களாக இருந்தால், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக, பழைய வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும். அப்படி அவர்கள் பயன்படுத்தினால், பாஜக வெற்றி பெறாது என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்" என்று கூறினார்.

ஏற்கனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. தற்போது மாயாவதியும் அதே குற்றச்சாட்டை கூறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com