சாதனை படைத்த லியோ.. 6 வயதில் அசத்திய சிறுவன்! உலகின் கவனத்தை ஈர்த்தது எப்படி?
சிறுவயதிலேயே வனவிலங்கு பாதுகாப்பில் ஈடுபட்ட லியோ, யூடியூப் மூலம் 13,000 பவுண்டுகள் நிதி திரட்டி, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் பங்கேற்று, 'International Young Eco-Hero Award' உள்ளிட்ட அங்கீகாரங்களை பெற்றுள்ளார்.
செய்தியாளர் - ராஜ்குமார். ர
லண்டனைச் சேர்ந்த 12 வயது சிறுவன் லியோ சர்டெல்லோ-சவாலே. சிறு வயது முதலே விலங்குகள் மற்றும் இயற்கை மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த லியோ, தனது ஆறு வயதிலேயே 'Leo's Animal Planet' என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கி அதில் வனவிலங்குகள், அழிந்து வரும் உயிரினங்கள், சுற்றுச்சூழல் பிரச்னைகள் மற்றும் விலங்குகள் நலன் குறித்த வீடியோக்களை உருவாக்கி பதிவிட்டு வருகிறார்.. இவரது வீடியோக்கள் பல்வேறு நாடுகளில் உள்ள பள்ளிகளிலும் வனவிலங்கு பாதுகாப்பு குறித்துக் கற்பிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இதுமட்டுமின்றி, இந்தியாவில் உள்ள ஷங்கர் என்ற ஆப்பிரிக்க யானையை மீட்பதற்காக நடத்தப்பட்ட 'Free Shankar Campaign' என்ற விழிப்புணர்வு இயக்கத்திற்கும் லியோ தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.
லியோவின் இந்த முயற்சிகளுக்காக அவருக்கு பல்வேறு அங்கீகாரங்களும் விருதுகளும் கிடைத்துள்ளன. இதில் குறிப்பிடத்தக்க அங்கீகாரம் 2023 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் வழங்கப்படும் 'International Young Eco-Hero Award' விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, 2024ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்பில் இளம் தலைமுறையினரை ஊக்குவிக்கும் 'Born Free' அமைப்பின் Junior Ambassador ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
யூடியூப் சேனல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி, இயற்கையை மீட்டெடுக்கும் பணிகளிலும் லியோ ஈடுபட்டு வருகிறார். காட்டுப்பூக்களின் விதைகளைக் கொண்ட விதைப் பந்துகளைத் தயாரித்து விநியோகிப்பது, பறவைகளுக்கான கூடுகளை உருவாக்குவது போன்ற செயல்பாடுகளிலும் பங்கேற்று வருகிறார். வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காக நிதியும் திரட்டி வருகிறார். தனது யூடியூப் சேனல் மூலம் கிடைக்கும் வருமானம் பள்ளியில் நடத்தும் நிதி திரட்டும் நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு வழிகளில் இதுவரை விலங்குகள் நல அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டங்களுக்காக 13,000 பவுண்டுகளுக்கும் அதிகமான நிதியைத் திரட்டியுள்ளார். அதாவது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.15 லட்சத்துக்கும் அதிகம்.. வனவிலங்குகளைப் பாதுகாப்பது, அழிந்து வரும் உயிரினங்களைக் காப்பது, விலங்குகளைத் துன்புறுத்துவதைத் தடுப்பது ஆகியவற்றில் இளம் தலைமுறையினரும் பங்களிக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்கிறார் லியோ.
பொதுவாக, பெரியவர்கள் மட்டுமே சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று பலரும் நினைப்பதுண்டு. ஆனால், ஆறு வயதில் தொடங்கிய ஒரு சிறுவனின் முயற்சி இன்று சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறும் அளவுக்கு வளர்ந்துள்ளது. வயது ஒரு தடையல்ல; ஆர்வமும் முயற்சியும் இருந்தால் சிறு வயதில்கூட உலகில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு லியோ ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார்!
