ஒரே ஒரு பட்டாணிக்கு ₹20,000 பிடித்தம் செய்த ஹவுஸ் ஓனர்.. டிக் டாக்கில் நியாயம்கேட்ட பெண்!

ஒரே ஒரு பட்டாணிக்கு ₹20,000 பிடித்தம் செய்த ஹவுஸ் ஓனர்.. டிக் டாக்கில் நியாயம்கேட்ட பெண்!
ஒரே ஒரு பட்டாணிக்கு ₹20,000 பிடித்தம் செய்த ஹவுஸ் ஓனர்.. டிக் டாக்கில் நியாயம்கேட்ட பெண்!

வாடகை வீட்டில் குடியிருக்க வேண்டுமானால் டெபாசிட் பணமாக ஆயிரங்களிலும், லட்சங்களிலுமே உரிமையாளர்கள் வசூலிப்பதுண்டு. வீட்டை காலி செய்யும்போது அந்த தொகை திரும்ப கொடுக்கப்பட்டாலும் முதலில் அத்தகைய பெரும் தொகையை புரட்டுவது சிலருக்கு சிரமமாகவே இருந்திருக்கும்.

அதேப்போல, குடியிருந்த காலத்தில் வீட்டில் ஏதேனும் சேதம் ஏற்படுத்தினால் அந்த டெபாசிட் பணத்தில் இருந்து சேதத்திற்கான செலவை பிடித்தம் செய்துக்கொண்டே எஞ்சியதை கொடுப்பார்கள்.

ஆனால் வித்தியாசமான காரணங்களை கூறி அந்த டெபாசிட் பணத்தை கொடுக்காமலோ, குறைக்கவோ செய்யும் சம்பவங்கள் ஆங்காங்க நடைபெறக்கூடும். அந்த வகையிலான சம்பவத்தைதான் மட்டில்டா என்ற டிக்டாக் பயனர் வீடியோவாக வெளியிட்டு ஹவுஸ் ஓனரின் அட்ராசிட்டியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அவரது டிக்டாக் வீடியோவில் எங்களுடைய டெபாசிட் பணம் திரும்ப கொடுக்கப்படாததற்கான காரணங்கள் என்ன என்பதை காணலாம் எனக் குறிப்பிட்டு பட்டியலிட்டு ரேட்டிங்கும் கொடுத்திருக்கிறார்.

அதில், “ஃபிரிட்ஜில் ஒரே ஒரு பட்டாணி துண்டு இருந்ததற்காக 6/10. இதனை சுத்தம் செய்யும் வேலை ரொம்ப கடினமானதாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்” , “ரூம் ஃப்ரஷ்னர் பாட்டில் விட்டுச் சென்றதற்காக 4/10. ஒருவேளை அவர்களுக்கு இதன் வாசனை பிடிக்காமல் போயிருக்கும்.” ,

“ஈரப்பதத்தை போக்கும் மெஷின். இது அவர்களுடையதுதான். ரொம்ப வருஷமா இங்கயே தான் இருந்தது 7/10. அதை பயன்படுத்தாம இருந்தது எங்கள் தப்புதான்” , “தரையில் கிடக்கும் இந்த ஒரு துண்டு பேப்பருக்காகவும் பணத்தை கொடுக்கவில்லை. 9/10. இதனை சுத்தம் செய்ய ஏராளமானோர் கொண்ட குழு தேவைப்படும் என நினைக்கிறேன்.” என்று அந்த வீடியோவில் மட்டில்டா குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த காரணங்களுக்காகத்தான் 210 பவுண்ட் அதாவது 20,231 ரூபாய் டெபாசிட் பணத்தை அந்த ஹவுஸ் ஓனர் திரும்ப கொடுக்காமல் இருந்திருக்கிறார். மட்டில்டாவின் வீடியோவை கண்ட நெட்டிசன்கள் பலரும் “இந்த காரணங்களுக்காகவெல்லாம் பணத்தை கொடுக்க மாட்டேன் எனக் கூறுவது சட்டப்படி முறையல்ல. நீங்கள் மேல் முறையீடு செய்யுங்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com