டிடிவி தினகரனின் பொதுக்கூட்டத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி
மதுரை மேலூரில் வரும் 14 ஆம் தேதி டிடிவி தினகரன் நடத்தும் பொதுக் கூட்டத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.
மதுரையை சேர்ந்த சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அதில், வரும் 14 ஆம் தேதி மேலூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் டிடிவி தினகரனும் பங்கேற்க உள்ளார். பொதுக்குழு கூட்டத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன. எனவே கூட்டத்திற்கு அனுமதி கோரி காவல்துறையிடம் மனு கொடுத்திருந்தோம். ஆனால் கூட்டத்திற்கு அனுமதி வழங்கியோ அல்லது மனுவை நிராகரித்தோ காவல்துறை சார்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. ஒருவேளை காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டால் அந்த நேரத்தில், நீதிமன்றத்தை அணுகுவது இயலாத காரியம். எனவே பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர், மேலூரில் டிடிவி தினகரன் நடத்தும் பொதுகூட்டத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுக்கூட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் அறிவுறுத்தியுள்ளார்.