நீதிமன்றத்தை அவதூறாக விமர்சித்த விவகாரத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விசாரணைக்கு ஆஜராக அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் இந்த ஊர்வலம் சென்றது. அப்போது குறிப்பிட்ட வழியில் ஊர்வலம் செல்ல உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை ஏற்க மறுத்த ஹெச்.ராஜா காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தடையையும் மீறி ஊர்வலம் சென்றது. இதனிடையே வாக்குவாதத்தில் நீதிமன்றம் மற்றும் காவல்துறையினர் குறித்து மோசமான கருத்துக்களை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர அனுமதி கோரி தந்தை பெரியார் திராவிட கழக காஞ்சி மாவட்ட அமைப்பாளர் கண்ணதாசன் தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞரிடம் நேற்று மனு அளித்தார். இதனை ஏற்று அக்டோபர் 3ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு ஹெச்.ராஜா நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.