நாகையில் உரத்தட்டுப்பாடு: அதிக விலை கொடுக்கும் விவசாயிகள்..!
நாகை மாவட்டத்தில் கடும் உரத்தட்டுப்பாடு நிலவுவதால் தனியாரிடம் 20 முதல் 40 ரூபாய் கூடுதல் விலை கொடுத்து உரம் வாங்குவதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.
நாகை மாவட்டத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 45,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. சம்பா சாகுபடி பணிகள் ஒரு லட்சத்து 50,000 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான விவசாயிகள் நேரடி விதைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரே நேரத்தில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பணிகள் நடைபெற்று வருவதால் யூரியா உரத்துக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் வேளாண் கூட்டுறவு விற்பனையகத்தில் 280 ரூபாய் முதல் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் யூரியா மூட்டையின் விலை தற்போது தட்டுப்பாட்டை பயன்படுத்தி சில தனியார் நிறுவனங்கள் கடை உரிமையாளர்கள் யூரியாவை பதுக்கி 350 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.
உர தேவையை கணக்கிட்டு வேளாண்துறை அதிகாரிகள் மத்திய அரசுக்கு அனுப்பினால் மட்டுமே தேவையான உரங்களை மத்திய அரசு இறக்குமதி செய்யும். ஆனால் மாநில வேளாண் அதிகாரிகள் பிரதம மந்திரி கிசான் திட்ட முறைகேடு விசாரணையில் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளதால் இதற்கான பணிகள் தொய்வடைந்து உள்ளதாக டெல்டா விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

