பாஜக சொல்படி போராடவில்லை - அதிமுக கூறும் காரணம் நியாயம்தானா ?

பாஜக சொல்படி போராடவில்லை - அதிமுக கூறும் காரணம் நியாயம்தானா ?
பாஜக சொல்படி போராடவில்லை - அதிமுக கூறும் காரணம் நியாயம்தானா ?

பாஜக அரசுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடவில்லை என்று அதிமுக எம்.பிக்கள் கூறியுள்ளனர்.  

அதிமுக எம்.பிக்களின் செயல்பாடுகளை இன்று நாடே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மக்களவையில் எந்த அலுவல்களும் நடைபெறாமல் முடங்கிப்போயுள்ளது. ஆனால், உண்மையில் அதிமுக எம்.பிக்கள் தமிழக மக்களின் நலனுக்காகதான் போராடிக் கொண்டிருக்கிறார்களா என்ற விமர்சனம் தற்போது எழுந்துள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி 16ஆவது நாளாக நாடாளுமன்ற இரண்டு அவைகளிலும் அதிமுக எம்.பி.க்கள் இன்றும் அமளியில் ஈடுபட்டனர். அதனால், நண்பகல் வாக்கிலேயே இரண்டு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், அவை ஒத்திவைக்கப்பட்டதும், கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால், மத்திய அரசின் தூண்டுதலின்பேரிலேயே அவை நடவடிக்கைகளை அதிமுக முடக்கி வருவதாக குற்றம்சாட்டிப் பேசினார். அதற்கு அதிமுக எம்.பி.க்கள் மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் அளிப்பதற்கு முன்பே, நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே காவிரி மேலாண்மை வாரியத்துக்காக போராடி வருவதாக அதிமுக எம்.பி.க்கள் பதிலளித்தனர்.

 எனினும், வேணுகோபாலின் கருத்தை ஆதரித்து காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் அதிமுக மீது குற்றம்சாட்டினார். நிரவ் மோடி உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிப்பதை தவிர்க்கவும், நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுத்துக் கொள்ளாமல் இருக்கவும் கூட்டணி கட்சிகளுடன் மத்திய அரசு மேட்ச் பிக்சிங்கில் உள்ளதாக கார்கே தெரிவித்தார். இதனால், காங்கிரஸ், அதிமுக எம்.பி.க்கள் இடையே மக்களவையில் கடும் வாக்குவாதம் நடந்தது.

தங்களை பற்றி தவறாக கூறிய மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் அதிமுக உறுப்பினர்கள் புகார் அளித்துள்ளனர். அதிமுக எம்பி வேணுகோபால் தலைமையில் எம்பிக்கள் குழு இந்த புகாரை அளித்தது. காங்கிரஸ் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் இடையே மக்களவையில் நடந்த ஆவேச விவாதம் குறித்து அவர்கள் சபாநாயகரிடம் விளக்கினர். அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதை முடக்கும் நோக்கில் அதிமுகவினர் வேண்டுமென்றே அவையில் அமளியில் ஈடுபடுவதாக காங்கிரஸ் எம்பி்க்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளன. நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கும் மனநிலையில் பல்வேறு கட்சிகள் இருக்கின்றன. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நிச்சயம் பாஜக அரசு வெற்றி பெறும். இருப்பினும் ஏன் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் ஒரு நீண்ட விவாதம் நடத்தப்பட வேண்டியிருக்கும். அதேபோல், தற்பொழுது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை எதிர்க்கட்சிகள் தங்களை ஒருங்கிணைக்கும் ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது. 

இத்தகைய நிலையில் தான், பாரதிய ஜனதா கட்சி கேட்டுக்கொண்டதன் பேரில் அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டை காங்கிரஸ் கூறியுள்ளது. இதில், உண்மை இல்லை என்று சொல்லிவிடவும் முடியாது. அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையிலான உறவு அனைவரும் அறிந்ததே. அதனால் அதற்கும் வாய்ப்பு உண்டு. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பிருந்தே தொடர்ச்சியாக போராடி வருகிறோம் என்று அதிமுகவினர் கூறுவது அவ்வளவும் ஏற்புடையதாக இல்லை. இன்னும் இரண்டு நாட்கள் அதிமுக எம்.பிக்கள் அமைதியாக இருந்தால் பெரிய நஷ்டம் எதுவும் ஏற்படப் போவதில்லை. ஆனால், அரசியல் ரீதியாக முக்கியமான நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. 29ம் தேதிக்கு மேலாண்மை வாரியம அமையாவிட்டால் அதிமுக எம்.பிக்கள் மேற்கொண்ட போராட்டம் அர்த்தமில்லாமல் போய்விடும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com