கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் குமாரசாமி வெற்றி பெற்றார்.
குமாரசாமிக்கு ஆதரவாக 117 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். வாக்கெடுப்புக்கு முன்னதாக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் பெரும்பான்மையை குமாரசாமி நிரூபித்தார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சபாநாயகர் ரமேஷ் குமார் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார்.
முன்னதாக, நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரி பேசிய முதலமைச்சர் குமாரசாமி, காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஐந்து ஆண்டு கால ஆட்சியை பூர்த்தி செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், பதவிக்காகவும், அதிகாரத்திற்காகவும் இந்த இடத்திற்கு வரவில்லை என்று அவர் கூறினார்.
இதற்கிடையே, விவசாய கடனைத் தள்ளுபடி செய்யாத அரசை கண்டித்து, வரும் 28ஆம் தேதி முழு அடைப்பு போரட்டத்திற்கு, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார். இதனை அவர் சட்டப்பேரவையில் தெரிவித்த பிறகு, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையில் எடியூரப்பா பேசுகையில், “தற்போது உங்களிடம் எண்ணிக்கை உள்ளது. எவ்வளவு நாட்கள் நீங்கள் நீடிக்கிறீர்கள் என்று பார்க்கலாம்” என்று கூறினார்.
தற்போது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 221. இரண்டு தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவில்லை. குமாரசாமி வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளில் ஒன்று காலியாக உள்ளது. காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றால் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 224 ஆக உயரும். அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க 113 பேரின் ஆதரவு தேவை. தற்போது குமாரசாமிக்கு 117 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளதால் அவரது கூட்டணி ஆட்சி நீடிப்பதில் எந்தப் பிரச்னையும் இருக்காது.