சிபிஐயிடம் புகார் அளிக்கலாம்.... ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
எம்எல்ஏ-க்கள் குதிரை பேரம் தொடர்பான குற்றச்சாட்டை புலனாய்வு அமைப்புகள் மூலம் விசாரிக்க வேண்டும் என்ற திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இது தொடர்பாக சிபிஐயிடம் ஸ்டாலின் புகார் அளிக்கலாம் எனவும் அறிவுறுத்தியது.
நம்பிக்கை வாக்கெடுப்புக்காக எம்.எல்.ஏக்கள் பேரம் பேசப்பட்டது தொடர்பான வீடியோ ஆதாரம் வெளியானதைத் தொடர்ந்து சிபிஐ மற்றும் வருவாய் புலனாய்வு அமைப்பு மூலம் விசாரிக்கக் கோரி கூடுதல் மனுவை உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் தாக்கல் செய்திருந்தார். இதற்கு பதில் அளித்த முதலமைச்சரும், பேரவை செயலாளரும், பேரவை நிகழ்வுகளை புலனாய்வு அமைப்புகள் மூலம் விசாரிக்க முடியாது என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், கூடுதல் மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் புதிய நீதிபதி பவானி சுப்புராயன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடத்தல் தங்கமாக இருந்தால் மட்டுமே விசாரிக்க முடியும் என்பதால் இது தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வராது என்று வருவாய் புலனாய்வு பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில் அதிக அளவில் பணப் பரிமாற்றம் மற்றும் தங்கம் அளிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து சிபிஐ மற்றும் வருவாய் புலனாய்வு அமைப்பினர் விசாரிக்க வேண்டும் என திமுக தரப்பில் வாதிடப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள், ஸ்டாலினின் கோரிக்கையை நிராகரித்தனர். ஆனால், குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ மற்றும் புலனாய்வு அமைப்பினரிடம் ஸ்டாலின் புகார் அளிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.