எம்எல்ஏக்கள் பேர விவகாரம்: பேரவைச் செயலாளருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
எம்எல்ஏக்கள் பேர விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்து வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்எல்ஏக்கள் பேரம் தொடர்பான வீடியோ குறித்து சிபிஐ அல்லது வருவாய் புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தமிழக எதிர்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சத்தியநாராயணா மற்றும் சுந்தர் ஆகியோர் அமர்வு முன்பாக வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மூல வழக்குக்கும் இந்த மனுவுக்கும் சம்பந்தமில்லை. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றதல்ல என்று வாதிட்டார். ஸ்டாலின் தரப்பில், சட்டப்பேரவையில் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க 3 நாட்களாக முயன்றதால், பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டோம். அதன்பின்னரே நீதிமன்றத்தை நாடியதாக வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக வரும் வெள்ளிக்கிழமைக்குள் விளக்கமளிக்குமாறு தமிழக சட்டப்பேரவை செயலாளருக்கு உத்தரவிட்டு, அன்றைய தினத்துக்கே வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர். மேலும், இந்த வழக்கில் விசாரணை கோருவது தொடர்பாக சிபிஐ இயக்குனரும், வருவாய் புலனாய்வு இயக்குனரும் பதிலளிக்கும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றிபெற்றது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என்று அறிவிக்கக் கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, அந்த வழக்கு விசாரணையில் இருக்கிறது. இதனிடையே நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பேரம் பேசப்பட்டதாக ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் வீடியோ வெளியானது.