“கமல் ‘ஆன்டி’ இந்தியன் இல்லை, ‘ஆன்டி’ மனித குலம்” - ஹெச்.ராஜா
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆன்டி இந்தியன் அல்ல, ஆன்டி மனித குலம் என பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’ என்று பேசியிருந்தார். கமலின் இந்தப் பேச்சுக்குப் பல தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன.
கமலின் இந்தப் பேச்சுக்கு அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையான கண்டனம் தெரிவித்தார். கமலின் நாக்கினை அறுக்க வேண்டும் எனும் அளவிற்கு அவர் காட்டமாக பேசினார். தேசிய அளவிலும் கமலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயும் கமலின் பேச்சினை கண்டித்தார். பாஜக தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், திக உள்ளிட்டோர் கமலின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கமலுக்கு எதிராக அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆன்டி இந்தியன் அல்ல, ஆன்டி மனித குலம் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹெச்.ராஜா கொடைக்கானலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்து குறித்தப் சர்ச்சை பேச்சுக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இல்லையென்றால் வைரமுத்துவுக்கு கிளம்பியது போன்று எதிர்ப்பு கிளம்பும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.