போயஸ் கார்டன் ரெய்டுக்கு டிடிவி குடும்ப ஸ்லீப்பர் செல்களே காரணம்: ஹெச்.ராஜா
போயஸ் தோட்ட இல்லத்தில் சோதனை நடந்ததற்கு டிடிவி தினகரன் குடும்பத்தில் உள்ள ஸ்லீப்பர் செல்கள் கூறிய தகவலே காரணம் என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, போயஸ் தோட்டத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை என்பது, அதற்கு முன் 6 நாட்கள் நடைபெற்ற வருமான வரித்துறை ரெய்டின் நீட்சியே என்றார்.
மேலும் பேசிய அவர், "தினகரன் அடிக்கடி ஸ்லீப்பர் செல் என்று சொல்லிக்கொண்டிருந்தார். இப்போது ஸ்லீப்பர் செல் எங்கு இருக்கிறது என்பது தெரிந்துவிட்டது. சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, இன்னும் இங்கெல்லாம் சோதனை நடத்த வேண்டியிருக்கிறது என சொல்லிக்கொடுக்க டிடிவி தினகரன் குடும்பத்திலே ஸ்லீப்பர் செல் இருக்கிறார்கள். வருமான வரித்துறை சோதனைக்காக மத்திய அரசை குறைகூறுவதில் எந்த நியாயமும் இல்லை. உப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும். தவறு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும்" என தெரிவித்தார்.