பாரதிராஜா இப்போது குதிப்பதேன்?: ஹெச்.ராஜா கேள்வி
ஜடம்போல் இருந்த பாரதிராஜா இப்போது வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பதேன் என ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் வைரமுத்து வாசித்தக் கட்டுரைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜக தலைவர்கள் ஹெச்.ராஜா, தமிழிசை உள்ளிட்டோரும், அதிமுகவை சேர்ந்த வைகைச்செல்வன், மைத்ரேயன் உள்ளிட்ட தலைவர்களும் வைரமுத்துவை விமர்சித்தனர். இதில் ஹெச்.ராஜா மிகவும் கடுமையான சொற்களால் வைரமுத்துவை விமர்சித்தார்.
கவிஞர் வைரமுத்துவை விமர்சித்த ஹெச்.ராஜாவை கண்டித்து இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் ஹெச்.ராஜாவை போன்ற மனிதர்களால்தான் இந்தியா துண்டாடப்பட போகிறது என்ற அச்சம் வருவதாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் பாரதிராஜாவுக்கு எதிராக ஹெச்.ராஜா தனது முகநூலில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், “ ஒவைசி அவர்கள் 15 நிமிடம் ராணுவத்தை நீக்குங்கள். 80% இந்துக்களை கொன்று குவிப்பேன் என்று சொன்ன போது பாரதிராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை. அஜ்மல் கசாப், அப்சல் குரு போன்றவர்கள் இந்தியாவில் தீவிரவாத சம்பவங்களை அரங்கேற்றிய போது பாரதிராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை. ராமர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்த போது பாரதிராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை. காஷ்மீரில் பல இந்துக்கோயில் இடிக்கப்பட்ட போது பாரதிராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பண்டிட்கள் விரட்ட பட்ட போது பாரதிராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை. வங்கதேச அகதிகள் அஸ்ஸாம் மாநிலத்தில் பூர்வீக போடோ குடிமக்களை விரட்டிய போது பாரதிராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை. காங்கிரஸ் கட்சி மதக்கலவர தடுப்பு மசோதா கொண்டு வர முயற்சித்த போது பாரதிராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை. கேரளாவில் லவ் ஜிஹாத் நடக்கும் போது பாரதிராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை. எல்லையில் இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் மிருகங்களால் கொல்லப்பட்டும் போது பாரதிராஜாவிற்கு அச்சம் ஏற்படவில்லை. அப்போது எல்லாம் அமைதியாக இருந்த பாரதிராஜா இப்போது வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பதேன்” என தெரிவித்துள்ளார்.