சதியால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்தா..?: ஹெச்.ராஜா
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம், விபத்தா அல்லது சதியா என பாஜக தேசிய செய்தித் தொடர்பாளார் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுர வளாகத்தில் உள்ள 35க்கும் மேற்பட்ட கடைகளில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. அதையடுத்து 5 தீயணைப்பு வண்டிகள் மூலம் மூன்று மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. இருப்பினும், தீ பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் மேற்கூரையிலிருந்து கற்கள் பெயர்ந்து விழுவதால், அதன் உறுதித் தன்மையை ஆய்வு செய்வதற்காக வருவாய் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம், விபத்தா அல்லது சதியா என பாஜக தேசிய செய்தித் தொடர்பாளார் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஹெச்.ராஜா, “ மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆயிரம் கால் மண்டபம் மேற்கூரை பாதிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வருகின்றன. இது விபத்தா சதியா என கண்டறிய பாரபட்சமற்ற விசாரணை தேவை. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் இன்னமும் ஏன் மதுரை செல்லவில்லை என்பது அரசின் மெத்தனப் போக்கை காட்டுகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.