"சுகாதாரத்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்" - ஸ்டாலின்
குட்கா வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டதன் பின்னணியில் சுகாதாரத்துறை அமைச்சரும் தமிழக டிஜிபியும் இருப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 40 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்துள்ள குட்கா வழக்கில், சுகாதார ஆய்வாளர் பதவியில் உள்ள சிவகுமார் என்ற ஊழியர் மேல்முறையீடு செய்திருப்பதுடன் அந்த வழக்கில் மிக மூத்த வழக்கறிஞரான முகுல் ரோத்தகியை ஆஜராக ஏற்பாடு செய்திருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறியுள்ளார். ஹெல்த் இன்ஸ்பெக்டராக உள்ள அரசு ஊழியர் ஒருவருக்கு மூத்த வழக்கறிஞரை நியமிக்க எங்கிருந்து பணம் வந்தது என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
குட்கா வழக்கு சிபிஐ விசாரணைக்கு சென்றால் சுகாதாரத்துறை அமைச்சரும், டிஜிபியும் வசமாக சிக்கிக் கொள்ள நேரிடும் என்பதால் ஹெல்த் இன்ஸ்பெக்டராக இருக்கும் சிவக்குமாரை சுகாதாரத்துறை அமைச்சரும், டிஜிபியும் தங்களது முகமூடியாக பினாமி முறையில் பயன்படுத்தி வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள் என்பது உண்மை என ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆகவே சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் டிஜிபியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார். குட்கா வழக்கின் மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று தமிழக அரசின் சார்பில் எடுக்கப்பட்ட உறுதியான முடிவினைத் தெரிவித்து வழக்கை சிபிஐக்கு மாற்றிய உயர்நீதிமன்ற தீர்ப்பில் ஆட்சேபனை இல்லை அறிவிக்க வேண்டும் என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.