குருமூர்த்தி பேச்சு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் விளக்கம்..!

குருமூர்த்தி பேச்சு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் விளக்கம்..!

குருமூர்த்தி பேச்சு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் விளக்கம்..!
Published on

ஆடிட்டர், பத்திரிகையாளர் தொழிலையே குருமூர்த்தி பார்த்தால் போதும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் துக்ளக் பத்திரிகையின் பொன்விழா சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அந்த பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி, “இரண்டாக பிரிந்த அதிமுகவை இணைத்ததில் தனக்கு பங்கு உள்ளது. எனது அறிவுறுத்தலின் படியே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தியானத்தில் அமர்ந்தார். அதன்பின்னரே கட்சியில் இணைப்பு ஏற்பட்டது. அதிமுக ஆட்சியை கவிழ்த்தால் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்துவிடும் என நான் பயந்தேன்” என்று பேசினார்.

ஓ.பன்னீர்செல்வம் குறித்து குருமூர்த்தி பேசியது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், குருமூர்த்தி நாவடக்கத்துடன் பேச வேண்டும் எனத் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது அமைச்சர் ஜெயகுமார் இதனை தெரிவித்தார்.

இந்நிலையில், தனது பேச்சு குறித்து குருமூர்த்தி ட்விட்டரில் விளக்கம் அளித்தார். அதில் அவர், “ஓபிஎஸ்-ஸை தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை. ஏன் அதிமுகவினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள் என்கிற அர்த்தத்தில்தான் கேட்டேன். அது அவருக்கும் தெரியும். அவர் தான் அதிமுகவை சசிகலாவிடமிருந்து காப்பாற்றினார். அவர் மேல் எனக்கு மிகவும் மரியாதை” என எழுதி இருந்தார்.

இவரது விளக்கத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒரு அதிமுகவின் தொண்டனாக காலையிலேயே விமான நிலையத்தில் இதை கண்டித்து பேசி இருந்தேன். குருமூர்த்தி ஏற்கெனவே அதிமுகவினரை குறித்து பேசி வாங்கிக் கட்டிக் கொண்டது எல்லாம் அனைவரும் அறிவர். முரண்பாடுகளின் மொத்த உருவம்தான் குருமூர்த்தி என்பதை அவரது மறுப்பை படித்தாலே தெரியும். நேற்று அவர் பேசிய வீடியோவை போட்டு பாருங்கள். அது சமூக வலைத்தளங்களில் வேகமாக  பரவி வருகிறது. அதை பார்த்துவிட்டு எந்த ஒரு அதிமுக தொண்டனும் சும்மா இருக்கமாட்டார்கள். அதற்கான பதில்தான் நான் சொன்னேன். நான் பதில் சொன்ன பிறகு இப்படி மழுப்பல் அறிக்கையை வெளியிட வேண்டும்? அவர் ஒரு ஆடிட்டர். ஒரு பத்திரிகையாளர். அந்தத் தொழிலை பார்த்தாலே போதும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com