கங்கை நீர்.. சாக்கடை நீர்.. - இணையத்தில் பேசுபொருளான குருமூர்த்தி!

கங்கை நீர்.. சாக்கடை நீர்.. - இணையத்தில் பேசுபொருளான குருமூர்த்தி!
கங்கை நீர்.. சாக்கடை நீர்.. - இணையத்தில் பேசுபொருளான குருமூர்த்தி!

துக்ளக் ஆண்டு விழாவில் பாஜக தலைவர்கள் முன்னிலையில் அதிமுக கூட்டணி குறித்தும், சசிகலா குறித்தும் சர்ச்சை கருத்துகளை பேசி இணையத்தில் ஹாட் டாப்பிக்கா மாறினார் குருமூர்த்தி.

சென்னை கலைவாணர் அரங்கில் துக்ளக் வார இதழின் 51ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய குருமூர்த்தி, "யார் தேசியத்தை விரும்பிகிறார்களோ அவர்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க விரும்பும் சூழல் உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுமை உள்ளது. அது வெளிப்பட தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் ஜாதி கட்சிகள் உருவாக திராவிடமே காரணம். பிராமண எதிர்ப்பு தான் ஜாதி கட்சி உருவாக காரணம். திமுகவை எதிர்க்க வேண்டுமெனில் சசிகலா போன்றவர்களையும் சேர்த்து கொள்ள வேண்டும்" என்றார். குறிப்பாக அவர் சசிகலா குறித்து பேசிய பேச்சு இணையத்திலும், அரசியல் வட்டாரத்திலும் சர்ச்சையை கிளப்பியது.

"வீடு பற்றி எரிகிறது கங்கை ஜலத்திற்கு நாம் காத்துக்கொண்டிருக்க முடியாது, நாம் சாக்கடை ஜலத்தையும் வாரி வீசுவோம் என்று அருண் செளரி கூறியிருந்தார். அவர் சொன்னது போல், திமுகவை வீழ்த்த சசிகலாவாக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் கங்கை ஜலத்துக்கு காத்திருக்காமல் எல்லா ஜலத்தையும் ஏற்றுக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது" என்றார். சசிகலாவை சாக்கடை நீருடன் ஒப்பிட்டும், கைநழுவிப்போன ரஜினியை கங்கை நீருடன் ஒப்பிட்டும் குருமூர்த்தி பேசியதாக பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்தனர்.

இது குறித்து விளக்கம் அளித்த குருமூர்த்தி, அருண் ஷோரி சொன்னதை மேற்கோள் காட்டிப் பேசினேன். யாரோ ஒருமுறை சொன்னதுபோல் அமமுகவை மன்னார்குடி மாஃபியா என்றுதான் நான் இன்னும் கருதுகிறேன். அவர்கள் பாஜக-அதிமுக கூட்டணியின் ஒரு பகுதியாக மாறினாலும், சந்திரசாமியை சாக்கடையாகக் கருதியதுபோல நான் அவர்களை மாஃபியாக்களாக மட்டுமே கருதுவேன் என்றார்.

சசிகலாவின் வருகை அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் வேளையில் பாஜக தலைவர்கள் முன்னிலையில் அதிமுகவின் கூட்டணி குறித்தும் அது தொடர்பான சர்ச்சை கருத்துகளும் இணையத்தில் பரபரப்பாகவே இருந்தனர். அதன் பின்னரும் சசிகலா வருகை குறித்தான பேச்சுகள் அதிமுக வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் எழுந்துகொண்டே இருக்கிறது.

- முருகதாஸ் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com