'தலைவன் இருக்கிறான்' - கேப்டன் ஹர்திக்கின் ஸ்மார்ட் மூவ்களும் கோப்பையை வென்ற குஜராத்தும்!

'தலைவன் இருக்கிறான்' - கேப்டன் ஹர்திக்கின் ஸ்மார்ட் மூவ்களும் கோப்பையை வென்ற குஜராத்தும்!
'தலைவன் இருக்கிறான்' - கேப்டன் ஹர்திக்கின் ஸ்மார்ட் மூவ்களும் கோப்பையை வென்ற குஜராத்தும்!

இரண்டு மாதங்களுக்கு முன்பு மார்ச் 26 இல் இப்படி ஒரு சம்பவம் நிகழும் இந்த அணிதான் சாம்பியனாகும் என்று சொல்லியிருந்தால் யாருமே நம்பியிருக்கமாட்டார்கள். ஆனால், யாருமே எதிர்பார்த்திடாத அந்த சம்பவம் லட்சம் பேரின் ஆராவாரத்திற்கு இடையே நடந்திருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் ஆகியிருக்கிறது. அறிமுக சீசனிலேயே ஐ.பி.எல் கோப்பையை தட்டி தூக்கியிருக்கிறது. இதை அந்த அணி எப்படி சாத்தியப்படுத்தியது?


ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியை 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் வென்றிருக்கிறது. தொடக்கத்திலிருந்தே அத்தனை விஷயங்களும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சாதகமாகவே நடந்திருந்தது. அரிதாகவே டாஸை வெல்லும் சாம்சன் இந்த போட்டியில் டாஸை வென்று ஆச்சர்யப்படுத்தியிருந்தார். முதலில் பேட் செய்யப்போவதாகவும் குஜராத் சேஸ் செய்ய வைக்கப்போவதாகவும் சாம்சன் கூறியிருந்தார். டார்கெட்டை சேஸ் செய்வது குஜராத்துக்கு கைவந்த கலை. இதனால் சிரித்த முகத்தோடு மைக்கை பிடித்த ஹர்திக் பாண்ட்யா 'நான் டாஸை வென்றிருந்தாலும் சேஸ்தான் செய்திருப்பேன்' என மகிழ்ச்சியாக கூறினார். ஆக, அந்த டாஸை சாம்சன் வென்றிருந்தாலும் ஹர்திக்கிற்கும் குஜராத்திற்கும் என்ன தேவையோ அது கிடைத்திருந்தது.

பௌலிங்கில் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா எடுத்த முடிவுகள் அத்தனையுமே அணிக்கு தேவையான சரியான ரிசல்ட்டை கொடுத்திருந்தது. முதல் ஸ்பெல்லை ஷமியிடமும் யாஷ் தயாளிடமும் கொடுத்திருந்தார். இருவருமே மிகச்சிறப்பாக இடமே கொடுக்காமல் டைட்டான லைன் & லெந்த்தில் வீழ்த்தி அழுத்தத்தை ஏற்றினர். யாஷ் தயாள் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின் விக்கெட்டையும் வீழ்த்திக் கொடுத்திருந்தார். இந்த கூட்டணி முதல் 4 ஓவர்களில் 31 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தியிருக்க, ராஜஸ்தானுக்கு மூச்சு விடுவதற்கு கூட இடம் கொடுக்காமல் ரஷீத்கானையும் பவர்ப்ளேக்குள்ளேயே கொண்டு வந்தார். பவர்ப்ளேயின் முடிவில் ராஜஸ்தான் அணி 44 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அபாயகரமான பட்லர் 14 பந்துகளில் வெறும் 10 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். பட்ல்ரை கட்டுப்படுத்தியதே குஜராத்தின் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டது. பட்லரை ஒரு முனையில் நன்றாக கட்டுப்படுத்தியதால் இன்னொரு முனையில் இருந்த பேட்ஸ்மேன்கள் ரிஸ்க் எடுத்து ஆட வேண்டியிருந்தது. ரிஸ்க் எடுக்கும் போது விக்கெட்டுக்கான வாய்ப்புகளும் அதிகமாக உருவானது.

9 வது ஓவரை ஹர்திக் பாண்ட்யாவே வீச வந்தார். வீசிய இந்த முதல் ஓவரிலேயே கேப்டன் சஞ்சு சாம்சனின் விக்கெட்டை ஒரு ஆஃப் கட்டரில் வீழ்த்தியிருந்தார். 6 வது பௌலிங் ஆப்சனான ஹர்திக் பாண்ட்யா முழுமையாக நான்கு ஓவர்களையும் வீசும் முடிவை எடுத்தார். இந்த முடிவும் குஜராத்துக்கு சிறப்பான ரிசல்ட்களையே கொடுத்தது. சாம்சனின் விக்கெட்டை வீழ்த்தியவர் கொஞ்ச நேரத்திலேயே பட்லரையும் 39 ரன்களில் ஒரு அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் லைனில் குட் லெந்தில் வீசி எட்ஜ் ஆக்கி சஹாவிடம் கேட்ச் ஆக வைத்தார். அடுத்து அதிரடி வீரர் ஹெட்மயரின் விக்கெட்டையும் அவரே கேட்ச் பிடித்து வீழ்த்தினார். 4 ஓவர்களையும் முழுமையாக வீச வேண்டும் ஹர்திக் எடுத்த துணிச்சலான முடிவுக்கு கிடைத்த அற்புதமான பலன் இது. 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

ஹர்திக் பாண்ட்யா 4 ஓவரை வீச வேண்டும் என்கிற முடிவை எடுத்ததற்கு பின்னால் ஒரு சமயோஜிதமான திட்டமிடலும் இருந்தது. ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால், படிக்கல், ஹெட்மயர் என மூன்று முக்கிய இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். இப்படியான சூழலில் மிடில் ஓவரில் இடது கை ஸ்பின்னரான சாய் கிஷோரை வீச வைப்பது சரியாக இருக்குமா? எனும் கேள்வி எழுந்தது. மேலும், இரு அணிகளும் இதற்கு முன் மோதிய முதல் தகுதிச்சுற்று போட்டியிலும் சாய் கிஷோர் அதிகமான ரன்களை கொடுத்திருந்தார். 1 விக்கெட்டை வீழ்த்தியிருந்தாலும் 4 ஓவர்களில் 43 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார். சாம்சன், படிக்கல் போன்றோர் அவரின் பந்துகளை ரொம்பவே இலகுவாக எதிர்கொண்டிருந்தனர். அதிரடியாக ஆடியிருந்தனர். ஆக, இந்த போட்டியில் சாய் கிஷோரை நேரம் பார்த்து கச்சிதமாக பயன்படுத்த வேண்டும் என்பதில் ஹர்திக் தெளிவாக இருந்தார். அதனால்தான் மிடில் ஓவர்களில் சாய் கிஷோரை அழைக்காமல் ஹர்திக் பாண்ட்யாவே ஓவர்களை வீசியிருந்தார். ஜெய்ஸ்வால், படிக்கல், ஹெட்மயர், சாம்சன், பட்லர் என முக்கியமான அதிரடி ஆட்டக்காரர்கள் அத்தனை பேரும் வீழ்ந்த பிறகு 16 வது ஓவரில்தான் சாய் கிஷோருக்கு முதல் ஓவரையே கொடுத்திருந்தார். டெத் ஓவர்களில் 2 ஓவர்களை வீசிய சாய் கிஷோர் 20 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். சாய் கிஷொரை இவ்வளவு ஸ்மார்ட்டாக ஹர்திக் பயன்படுத்துவார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

இதுபோக, இடையில் 12 வது ஓவரில் ஷமி பந்துவீசுவதற்காக வந்தார். ஆனால், திடீரென முடிவை மாற்றிய ஹர்திக் ஷமியிடமிருந்து ரஷீத்கானுக்கு பந்தை கொடுத்திருப்பார். அந்த ஓவரை வீசிய ரஷீத்கான் 4 ரன்களை மட்டுமே கொடுத்து படிக்கலின் விக்கெட்டை வீழ்த்தியிருப்பார். இந்த விக்கெட் வீழ்ந்த பிறகு ஒரு ஸ்லிப்பையும் ஒரு ஷார்ட் கல்லியையும் வைத்து டெஸ்ட்டை மேட்ச்சை போல அட்டாக்கிங்காக ரஷீத்கானை வீச வைத்து ராஜஸ்தானை மேலும் தடுமாற செய்திருப்பார்.

இப்படியாக பௌலிங்கின் போது கேப்டனாக ஹர்திக் எடுத்த ஒவ்வொரு முடிவும் பௌலராக வீசிய ஒவ்வொரு ஓவருமே ராஜஸ்தானை 130 ரன்களுக்குள் கட்டுப்படுத்த மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தது. பேட்டிங்கின் போதுமே பவர்ப்ளேக்குள் இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்த சமயத்தில் கில்லுடன் நின்று 63 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருப்பார். முக்கியமான கட்டத்தில் 34 ரன்களை எடுத்துக் கொடுத்து அசத்தியிருப்பார்.

ஒரு கேப்டனாக பேட்ஸ்மேனாக பௌலராக ஃபீல்டராக என அத்தனை விதத்திலும் சிறப்பாக செயல்பட்டு குஜராத் அணி அறிமுக சீசனிலேயே கோப்பையை வெல்ல ஹர்திக் பாண்ட்யா பெரும் திருப்தியை அளிக்கும் வகையில் ஒரு பெர்ஃபார்மென்ஸை கொடுத்திருக்கிறார். இந்த வெற்றி ஹர்திக் பாண்ட்யாவை நட்சத்திர வீரர் என்கிற பட்டியலிலிருந்து ஒரு தலைவன் என்கிற பட்டியலுக்கு அழைத்து செல்லப்போகிறது. ஒரு தலைவன் உருவாகிறான்! வாழ்த்துகள் குஜராத்!

-உ.ஸ்ரீராம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com