'Smart Cricketer' - குஜராத்தின் Lucky Charm ஆக மாறும் சாய் சுதர்சன்

'Smart Cricketer' - குஜராத்தின் Lucky Charm ஆக மாறும் சாய் சுதர்சன்
'Smart Cricketer' - குஜராத்தின் Lucky Charm ஆக மாறும் சாய் சுதர்சன்

Lucky Charm களால் நிறைந்த அணி குஜராத் டைட்டன்ஸ். போட்டி கையை விட்டே சென்று விட்டதென நினைக்கும் சூழலிலும் யாரோ ஒருவர் எங்கிருந்தோ வந்து காட்டடி அடித்து போட்டியை வென்று கொடுத்துவிடுவார்கள். ஹர்திக் பாண்ட்யா, திவேதியா, ரஷீத்கான், மில்லர் என ஹை ப்ரொஃபைல் வீரர்கள் நிரம்பிய இந்த Lucky Charm பட்டியலில் இப்போது தமிழக வீரரான சாய் சுதர்சனும் இணைந்திருக்கிறார். திவேதியா போன்றோ ரஷீத்கான் போன்றோ சாகசமிக்க தன்மையோசு சாய் சுதர்சன் குஜராத்திற்காக போட்டியை வென்று கொடுக்கவில்லைதான். ஆனால், அணி மொத்தமாக சரிந்து கொண்டிருக்கும் சூழலில் கடைசி நம்பிக்கையாக நின்று அணியின் கௌரவத்தை தன்னால் காப்பாற்ற முடியும் என நிரூபித்திருக்கிறார். தன்னாலும் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆட முடியும் என்பதற்கான அறிகுறியை காண்பித்துவிட்டு சென்றிருக்கிறார்.

பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லாம் கடுமையாக சொதப்ப சாய் சுதர்சன் மட்டும் நின்று 65 ரன்களை அடித்து கடைசி வரை நாட் அவுட்டாக இருந்தார். ஹர்திக்கை மில்லரை திவேதியாவை வீழ்த்த முடிந்த பஞ்சாப் பௌலர்களால் சாய் சுதர்சனை மட்டும் வீழ்த்தவே முடியவில்லை.

சாய் சுதர்சன் 20 வயதே ஆகும் இளம் வீரர். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடியதன் மூலம் தமிழ்நாடு ப்ரீமியர் லீகில் ஆடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. லைகா கோவை கிங்ஸ் அணிக்காக களமிறங்கிய சாய் சுதர்சன் கடந்த சீசனில் 358 ரன்களை 144 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருந்தார். ஆவரேஜ் 71 ஆக இருந்தது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு அணிக்காக சையது முஷ்தாக் அலி டி20 தொடரிலும் நம்பர் 3-4 இல் இறங்கி சிறப்பாக ஆடியிருந்தார். பெரிய இன்னிங்ஸ் ஆடுகிறாரோ இல்லையோ சீராக எல்லா போட்டியிலும் கணிசமான ரன்களை எடுத்திருப்பார்.

இந்நிலையில்தான் ஐ.பி.எல் மெகா ஏலத்தில் குஜராத் அணி அடிப்படை விலையான 20 லட்சத்திற்கே சாய் சுதர்சனை வாங்கியிருந்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி ஒரு அணியாக முழுமையாக செட்டில் ஆகியிருந்தாலும் அந்த நம்பர் 3 விஷயத்தில் மட்டும் குஜராத் கொஞ்சம் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டே இருந்தது. முதல் இரண்டு போட்டிகளில் நம்பர் 3 இல் இன்னொரு தமிழக வீரரான விஜய் சங்கரை குஜராத் முயற்சி செய்திருந்தது. விஜய் சங்கர்தான் அவர்களின் முதல் ஆப்சன். ஆனால், அவர் அந்த இரண்டு போட்டிகளிலுமே சோபிக்காததால் அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கினார்கள். பஞ்சாபுக்கு எதிரான அறிமுக போட்டியிலேயே சுப்மன் கில்லுடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்பார்க் காட்டியிருந்தார். அடுத்த போட்டியில் கொஞ்சம் சொதப்பியிருந்தார். உடனே பென்ச்சில் வைத்துவிட்டார்கள். விஜய் சங்கர் மீண்டும் உள்ளே வந்தார். ஆனால், அவரால் பெர்ஃபார்ம் செய்யவே முடியவில்லை. விஜய் சங்கரும் வேண்டாம் சாய் சுதர்சனும் வேண்டாம் என ஒரு பேட்ஸ்மேன் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என ஹர்திக் பாண்ட்யாவே நம்பர் 3 இல் இறங்க ஆரம்பித்தார். ஒரு சில போட்டிகள் இப்படியாக தொடர்ந்த நிலையில், குஜராத் புள்ளிப்பட்டியலில் நல்ல நிலையில் இருப்பதால் மீண்டும் அந்த நம்பர் 3 ஐ செட் செய்யும் முயற்சியில் இறங்கினர். சாய் சுதர்சன் மீண்டும் ப்ளேயிங் லெவனுக்குள் வந்தார். இந்த முறையும் மீண்டும் பென்ச்சுக்கு செல்லும் எண்ணம் அவருக்கு இல்லை. தவிர்க்கமுடியாதபடிக்கு ஒரு இன்னிங்ஸை ஆடிக்காட்ட விரும்பினார். விருப்பத்தின்படியே அப்படி ஒரு இன்னிங்ஸை பஞ்சாபுக்கு எதிராக ஆடி முடித்தார்.

மூன்றாவது ஓவரில் க்ரீஸுக்குள் வந்த சாய் சுதர்சன் கடைசி பந்து வரை ஆட்டமிழக்கவில்லை. 50 பந்துகளில் 65 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 130. கொஞ்சம் மெதுவான இன்னிங்ஸை போன்றுதான் தோன்றும். ஆனால், அந்த மெதுவான இன்னிங்ஸ்தான் நேற்று குஜராத் அணிக்குமே தேவைப்பட்டிருந்தது. 6.2 ஓவர்களுக்குள்ளேயே குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. சீரற்று ஆடும் சுப்மன் கில் இந்த போட்டியிலும் சொதப்பியிருந்தார். நம்பிக்கை நட்சத்திரமான கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும் சீக்கிரமே அவுட் ஆகியிருந்தார். இவர்களுக்கு பிறகு வந்த ராகுல் திவேதியா, மில்லர், ரஷீத்கான் ஆகியோராலும் ஒன்றும் செய்ய மிடியவில்லை. விக்கெட்டுகள் விழுந்துக்கொண்டே இருந்தது. அந்த சமயத்தில் ஒரு முனையில் விக்கெட் விழாமல் காத்திருந்து ஆடுவதே அணியின் பிரதான தேவையாக இருந்தது. அதைத்தான் சாய் சுதர்சன் செய்திருந்தார்.

முழுமையாக தற்காப்பாக ஆடினார் என்றும் சொல்ல முடியாது. சில இடங்களில் நன்றாகவே ஆதிக்கம் செலுத்தியிருந்தார். சாய் சுதர்சன் எதிர்கொண்ட முதல் 24 பந்துகளில் 18 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். அடுத்த 26 பந்துகளில் 47 ரன்களை எடுத்திருந்தார். அவரின் இன்னிங்ஸை இரண்டாக பிரித்தால் இரண்டாம் பாதியில் நல்ல துரிதமாகவே ரன்கள் சேர்த்திருந்தார். குறிப்பாக, டெத் ஓவர்களில் அபாயகரமான பௌலரான அர்ஷ்தீப் சிங்கை நன்றாகவே எதிர்கொண்டிருந்தார். இந்த சீசனில் மிகக்குறைவான சிக்சர்களை வழங்கியிருக்கும் பௌலர்களில் முதலிடத்தில் அர்ஷ்தீப் சிங்கே இருக்கிறார். நான்கே நான்கு சிக்சர்களை மட்டும்தான் இதுவரை கொடுத்திருக்கிறார். டூப்ளெஸ்சிஸ், ரஸல், சூரியகுமார் யாதவ் இந்த மூன்று பேரும் மட்டுமே அர்ஷ்தீப்பின் பந்தில் சிக்சர்களை அடித்திருந்தனர். இந்த பட்டியலில் புதிதாக தன் பெயரையும் சாய் சுதர்சன் நேற்று பதிவு செய்து கொண்டார். 18 வது ஓவரில் அர்ஷ்தீபுக்கு எதிராக மிட்விக்கெட்டில் ஒரு மிரட்டலான சிக்சரை மடக்கி அடித்திருப்பார். அர்ஷ்தீப் இந்த சீசனில் வழங்கிய ஐந்தாவது சிக்சரை அவருக்கு பரிசாக கொடுத்தது சாய் சுதர்சனே. மேலும், இந்த சீசனில் டெத் ஓவர்களில் மிகக்குறைவான எக்கானமி வைத்திருக்கும் பௌலரும் அர்ஷ்தீப் சிங்தான். ஓவருக்கு 6 க்கும் கீழ்தான் ரன்களை வழங்கியிருக்கிறார். ஆனால், நேற்று சாய் சுதர்சன் ஆடிய போது கடைசிக்கட்டத்தில் அர்ஷ்தீப் சிங் வீசிய இரண்டு ஓவர்களில் 22 ரன்கள் வந்திருக்கும். எக்கானமி ரேட் 11. அரிதினும் அரிதாகவே அர்ஷ்தீப் சிங் இப்படி அடிவாங்குவார். அந்த அரிய சம்பவத்தை சாய் சுதர்சன் நிகழ்த்திக் காட்டியிருந்தார். இதுபோக, ராகுல் சஹாரின் திடீர் கூக்ளிக்களையும் லெக் ப்ரேக்குகளையும் கூட சரியாக கணித்து பவுண்டரிக்களை அடித்திருந்தார்.

இந்த இன்னிங்ஸில் பெரிதாக எங்கேயுமே சாய் சுதர்சன் தடுமாறவில்லை. ஒன்றிரண்டு எட்ஜ்களும் மிஸ்டைம் ஷாட்களும்தான் இருந்ததே தவிர அதைத்தாண்டி எங்கேயும் சறுக்கவில்லை. ஒரு க்ளாஸான இன்னிங்ஸை ஆசியிருந்தார். அவரின் டெக்னிக்களுமே பெரும்பாலும் மரபான டெக்னிக்காகத்தான் இருக்கிறது. எந்த சலனமும் இல்லாமல் ஸ்டாண்ட்ஸ் எடுத்துக்கொண்டு பெரிய அதிர்வுகள் இன்றி நல்ல Foot work ஓடு சரியான டைமிங்கில் ஷாட்களை ஆட முயற்சிக்கிறார். அதேநேரத்தில், டி20 க்கே தேவையான Innovative ஷாட்களையும் போதுமான அளவுக்கு கற்று வைத்திருக்கிறார். பஞ்சாபுக்கு எதிரான போட்டியிலேயே கடைசி ஓவரில் விக்கெட் கீப்பரின் தலைக்குமேல் கச்சிதமாக அவர் ஆடிய அந்த ரேம்ப் ஷாட்தான் அதற்கு சாட்சி. பொதுவாகவே ஒரு இளம் வீரர் புதிதாக அறிமுகமாகிறார் எனில், கமெண்ட்ரியில் பேசிக்கொண்டிருக்கும் மூத்த வீரர்கள் அந்த இளம் வீரரை மதிப்பிட அவரின் Foot Work ஐயே ஒரு அளவீடாக வைத்திருப்பார். சீசனின் தொடக்கத்தில் இதே பஞ்சாபுக்கு எதிராக முதல் போட்டியில் சாய் சுதர்சன் அறிமுகமான போதே, கமெண்ட்ரியில் பேசிக்கொண்டிருந்த கவாஸ்கர், ஹேடன் போன்றவர்களால் சாய் சுதர்சனின் கால்களை நகர்த்தும் யுக்தி அதிகம் பாராட்டப்பட்டது. ரபாடா வீச அந்த போட்டியில் சந்தித்த இரண்டாவது பந்தையே சாய் சுதர்சன் பவுண்டரியாக்கியிருப்பார். ரபாடாவின் அடுத்த ஓவரிலேயே ஒரு ஷாட் பாலில் ஃபைன் லெக்கில் ஒரு ஹூக் ஷாட்டை சாய் சுதர்சன் அடித்திருப்பார். இந்த ஷாட்டிற்கு அவர் பின்னங்காலை ஊன்றி முன்னங்காலை சரியான டைமிங்கில் தூக்கி ஷாட்டை கனகச்சிதமாக நிறைவு செய்தது பலராலும் விதந்தோதப்பட்டது. கவாஸ்கரால் 'Smart Cricketer' என்றும் புகழுரையை பெற்றார்.

சாய் சுதர்சன் இளம் வீரர்தான். நவீன டி20 காலத்தில் கிரிக்கெட் பழகியவர்தான். ஆனால், அவர் மரபார்ந்த டெக்னிக் விஷயங்களிலும் ரொம்பவே கவனமாக இருக்கிறார். அடிப்படையில் கவனமாக இருந்துக்கொண்டு டி20 க்கு தேவையான நவீனங்களையும் போதுமான அளவுக்கு கைக்குள் வைத்திருப்பதால் அவரால் எப்படிப்பட்ட அணுகுமுறையோடும் ஆட முடியும். பஞ்சாபுக்கு எதிராக சாய்சுதர்சன் காட்டியது அவரின் ஒரு வெர்ஷனைத்தான். இன்னும் நம்மை ஆச்சர்யப்படுத்தும் வகையில் பல வெர்ஷன்கள் விரைவிலேயே அவரிடமிருந்து வெளிப்படக்கூடும்!

-உ.ஸ்ரீராம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com