பாஜக மாபெரும் வெற்றி பெறும்: குஜராத் முதலமைச்சர்
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரும் வெற்றி பெறும் என அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபாணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் கடந்த 9 மற்றும் 14ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதற்கிடையே வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு வெளியான கருத்துக்கணிப்புகளில் அதிகமான இடங்களை பாஜகவே கைப்பற்றும் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் குஜராத் வாக்கு எண்ணிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபாணி, “குஜராத் தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதாவுக்கு சாதகமாக இருக்கும் என முழுமையாக நம்புகிறேன். பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும். அதற்கு மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகள் கிடைக்கும். குஜராத் மக்கள் வளர்ச்சி அரசியலுக்கு வாக்களித்துள்ளனர். பிரதமர் மோடி வளர்ச்சியை கொண்டுவந்துள்ளார். வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த புகார்கள் எந்த முகாந்திரமும் இல்லாதவை. தோல்வி பெற்ற பழி ராகுல்காந்தி மீது விழக்கூடாது என்பதற்காக இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். பஞ்சாபில் சரியாக இருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இங்கு மட்டும் குளறுபடியாக இருக்குமா?” என்று கூறினார்.