நிலைக்குமா குஜராத் பாஜக அரசு?: 3-வது நாளிலே வெடிக்கும் குழப்பம்

நிலைக்குமா குஜராத் பாஜக அரசு?: 3-வது நாளிலே வெடிக்கும் குழப்பம்

நிலைக்குமா குஜராத் பாஜக அரசு?: 3-வது நாளிலே வெடிக்கும் குழப்பம்
Published on

குஜராத் மாநிலத்தில் பாஜக அரசு பதவியேற்ற மூன்றாவது நாளிலே கட்சிக்குள் பெரிய பிரச்சனை வெடித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக 99 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. காங்கிரஸ் 77 இடங்களை கைப்பற்றியது. ஆட்சியை பிடித்த போதும் 100 இடங்களைக் கூட கைப்பற்ற முடியாததால் சற்றே பின்னடைவு என்று தான் பாஜக கருதியது. இதனால்தான், விஜய் ரூபானியை மீண்டும் முதலமைச்சராக்குவதற்கு முதலில் தயங்கியது. ஒருவழியாக குஜராத் முதலமைச்சராக விஜய் ரூபானியும் மற்ற அமைச்சர்களும் பதவியேற்றனர். 

இந்நிலையில், பாஜக அரசு பொறுப்பேற்ற 3 நாட்கள் முடிவதற்கு அக்கட்சிக்குள் புதிய சிக்கல் வெடித்துள்ளது. துணை முதல்வர்  நிதின் படேல் வசம் இருந்த நிதி, நகர்புற மேம்பாடு மற்றும் பெட்ரோலியம் ஆகிய 3 துறைகள் பறிக்கப்பட்டுள்ளது. இதனால் நிதின் படேல் கடும் அதிருப்தியில் உள்ளார். இதனால் மற்ற அமைச்சர்கள் அனைவரும் பொறுப்பேற்றுள்ள நிலையில், நிதின் படேல் நேற்று பொறுப்பேற்கவில்லை. நிதின் படேல் தனது அதிருப்தியை முக்கிய தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்தக் குழப்பான அரசியல் சூழலில் படேல் சமுதாய தலைவர் ஹர்திக் படேல் தங்களுடைய அமைப்பில் சேருமாறு நிதின் படேலுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “பாஜக உரிய மரியாதை கொடுக்கவில்லை என்றால் நிதின் படேல் எங்களுடன் சேர வேண்டும். பாஜகவுக்காக அவர் கடுமையாக உழைத்துள்ளார். பாஜகவில் இருந்து அவர் 10 எம்.எல்.ஏ.க்கள் உடன் விலகுவதாக இருந்தால் நாங்கள் அவரை ஆதரிக்க தயார். காங்கிரஸ் கட்சியிடம் பேசி அவர்களுக்கு உரிய பதவிகள் வழங்க ஏற்பாடு செய்கிறேன்” என்றார்.

ஆனந்திபென் படேலுக்கு பிறகு நிதின் படேல் ஓரங்கட்டப்படுவதை பார்த்து வருவதாக காங்கிரஸ் கட்சி தரப்பில் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் பாரத்சிங் சோலங்கி தெரிவித்தார். மேலும் பட்டிதார் அமைப்பும் நிதின் படேலின் மெகசானா மாவட்டத்தில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் குஜராத் பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

குஜராத் பாஜக அரசில் இருந்து 10 எம்.எல்.ஏ.க்கள் விலகும் பட்சத்தில் அது ஆட்சியை இழக்கும் சூழல் ஏற்படும். குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ளது. ஆட்சி அமைக்க 92 எம்.எல்.ஏ.க்கள் தேவை. 100-க்கும் குறைவான எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால் பாஜக அரசுக்கு இந்தச் சூழல் நெருக்கடியாகவே கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com