ஜனநாயகப் படுகொலை நடக்க ஆளுநர் இடமளிக்கக் கூடாது: ஸ்டாலின் அறிக்கை!
தமிழகத்தில் சட்டவிரோத அமைச்சரவை நீடிக்கவும், ஜனநாயகப் படுகொலை நடைபெறவும் பொறுப்பு ஆளுநர் இடமளித்துவிடக் கூடாது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெஜாரிட்டியை இழந்துவிட்ட தமிழக அரசு நீடிக்க ஆளுநரும், சபாநாயகரும் ஜனநாயகத்திற்கு விரோதமாக நடந்து கொள்வது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். தனித்தனியாக எம்எல்ஏக்கள் சந்தித்து முதலமைச்சருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்த பின்னர், ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆளுநரின் தாமதத்தை பயன்படுத்திக் கொண்டு ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள நினைக்கும் முதலமைச்சர், பேரவைத் தலைவரை வலியுறுத்தி 19 எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய நோட்டீஸ் கொடுக்க வைத்துள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரவையில் நடைபெறாத நிகழ்வுக்கு பேரவைத் தலைவர் சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், எங்கே பேரவைத் தலைவர் அதிமுக சார்பில் முதலமைச்சராகிவிடுவாரோ என்ற அச்சத்தில் அவரை வைத்தே இப்படியொரு நோட்டீசை கொடுக்க வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு ஆட்சிக்கு ஆதரவளித்த எம்எல்ஏக்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெறும்போது, அந்த ஆட்சிக்கு மெஜாரிட்டி இருக்கிறதா என்பதை உறுதி செய்ய ஆளுநர் உடனடியாக பேரவையைக் கூட்ட வேண்டும் என்று பல தீர்ப்புகளில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருப்பதாக கூறியுள்ள திமுக செயல் தலைவர், தமிழகத்தில் நடக்கின்ற சட்டவிரோத செயல்கள் எல்லாம், ஜனநாயகப் படுகொலையாக மட்டுமல்ல, சட்டமன்ற ஜனநாயகத்தையே சிதைக்கும் செயலாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது போன்ற தருணங்களில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் குதிரை பேரங்களும், அரசியல் சித்து விளையாட்டுகளும் அரங்கேற இடமளித்து விடும். எனவே, முதலமைச்சரும், பேரவைத் தலைவரும் கைகோர்த்து ஜனநாயகப் படுகொலை நடத்துவதை உடனடியாக தடுத்து நிறுத்த பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என ஆளுநரை ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.