சில தொலைக்காட்சிகள் கீழ்த்தரமான செய்திகள் வெளியிட்டுள்ளன: ஆளுநர் மாளிகை கண்டனம்
தூய்மை இந்தியா திட்டம் தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மேற்கொண்ட ஆய்வு குறித்து சில தொலைக்காட்சிகளில் வெளியான செய்திகள் கீழ்தரமானவை என்றும் தவறானவை என்றும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டத்தில் தூய்மை இந்திய திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறைகளை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சென்று ஆளுநர் ஆய்வு மேற்கொண்டது தொடர்பாக தீயநோக்கம் கொண்ட கீழ்த்தரமான செய்திகள் வெளியாகியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கவுரி என்பவரின் வீட்டில் கழிவறை கட்டப்பட்டிருந்ததாகவும், இந்த வீட்டுக்கு, ஒரு பெண் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் ஆட்சியருக்கு பின்னால் ஆளுநர் சென்றதாக கூறப்பட்டுள்ளது. கழிவறை காலியாக இருப்பதை உறுதி செய்துகொண்டபின் மாவட்ட ஆட்சியர் பெண் வட்டாட்சியரை பின்பற்றி அந்த இடத்திற்கு சென்றதாக ஆளுநர் மாளிகை குறிப்பிட்டுள்ளது. ஆட்சியருக்கு பின்னரே ஆளுநர் அந்த இடத்திற்கு சென்றதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சில தொலைக்காட்சிகளில் வெளியான தகவல் தீய நோக்கம் கொண்டது, கீழ்தரமானது, முறையற்றது மற்றும் தவறானது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஆளுநர் மாளிகை தொடர்பாக வெளியிடப்படும் எல்லா செய்திகளும் உறுதி செய்யப்பட்ட பின்னரே வெளியிடப்படவேண்டும் என்றும் பொறுப்பில்லாமல் செய்தி வெளியிடக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.