அரசு வேலை வழங்குவது நாய்க்கு பிஸ்கட் போடுவது அல்ல: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு
ஈராக்கில் 38 இந்தியர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட விவகாரத்தில், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் விகே சிங் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார்.
மொசூல் நகரில் கடந்த 2014ம் ஆண்டு ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டதாக, கடந்த 20-ம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை மொசூல் நகருக்குச் சென்ற வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், இந்தியர்களின் உடல்களை தனி விமானம் மூலம் இந்தியா கொண்டு வந்தார். வழக்கு நிலுவையில் இருப்பதால் மீதமுள்ள ஒருவரின் உடலை கொண்டு வரமுடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈராக்கில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை கொடுப்பது குறித்து மத்திய அமைச்சர் விகே சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இது கால்பந்து விளையாட்டு அல்ல. மத்திய, மாநிலத்திலும் உள்ள அரசுகள் மிகவும் சென்சிடிவான அரசாங்கங்கள். யாருக்கெல்லாம் வேலை வழங்க வாய்ப்புள்ளதோ அது குறித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் விவரங்களை வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. விவரங்கள் கிடைத்தவுடன் அது குறித்து பரிசீலிக்கப்படும்” என்று கூறினார்.
மேலும், “இது நாய்களுக்கு பிஸ்கட் போடும் வேலை அல்ல. இது மக்களின் வாழ்க்கை பற்றியது. தற்போது எப்படி என்னால் அறிவிப்பை வெளியிட முடியும்? உங்களுக்கு புரிகிறதா” கோபத்துடன் பேசினார்.