ராசிபுரம் அருகே அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் சாலை சாமூண்டி தியேட்டர் அருகே வசிப்பவர் பாண்டியன். இவரது மனைவி சுசிலா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பாண்டியன் ஆர்.புதுப்பாளையம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மனைவி சுசிலா கிட்டம்பாளையம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அறைக்குள் சென்ற சுசிலா நேற்று மாலை வரை அறையை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த கணவர் மற்றும் அருகில் உள்ளவர்கள் கதவை உடைத்து பார்த்தபோது சுசிலா தூக்கில் தொங்கியவாறு சடலமாக இருந்துள்ளார். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினரிடம் கணவர் பாண்டியன் கூறுகையில் மனைவிக்கு கலெக்டர் ஆகவேண்டும் என்று லட்சியம் இருப்பதால் அறைக்குள் சென்று நீண்டநேரம் படிப்பது வழக்கம் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் இன்று படிப்பதாக நினைத்த நிலையில் வீட்டிற்குள் தற்கொலை செய்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இதனிடையே பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே எதுவும் கூற முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.