சிஎஸ்கேவில் காலியாகும் சீனியர் பட்டாளங்கள் ! தோனி பேசியதன் பின்னணி என்ன ?

சிஎஸ்கேவில் காலியாகும் சீனியர் பட்டாளங்கள் ! தோனி பேசியதன் பின்னணி என்ன ?
சிஎஸ்கேவில் காலியாகும் சீனியர் பட்டாளங்கள் ! தோனி பேசியதன் பின்னணி என்ன ?

சர்வதேச போட்டிகளிலிருந்து தோனி தன்னுடைய ஓய்வை அறிவித்த பின்பு ஐபிஎல்லில் பங்கேற்பதற்காக அமீரகத்தில் களமிறங்கியது சிஎஸ்கே படை. இறங்கியதும் சோதனை மேல் சோதனையை சந்தித்தது அந்த அணி. சிஎஸ்கே அணி நிர்வாகத்தில் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அடுத்து சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங்கின் விலகல் என குழப்பமானது சிஎஸ்கே.

கொரோனா தனிமைப்படுத்தலுக்கு பின் மைதானத்தில் களமிறங்கி வெறித்தனமான பயிற்சியில் ஈடுபட்டது சிஎஸ்கே. முதல் போட்டியில் மும்பையுடன் மோதல். ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றிப்பெற்றது சிஎஸ்கே. ஆஹா என நிமிர்ந்து உட்கார்ந்தார்கள் சிஎஸ்கே அணியின் காதலர்களாக இருக்கும் ரசிகர்கள். ஆனால் அதன்பின்பு சிஎஸ்கே கண்டதெல்லாம் தோல்விதான். அதுமட்டுமல்லாமல் அணி தேர்வு அது இது என ஏகப்பட்ட விமர்சனங்கள்.

அனைத்துக்கும் அசாராமல் பதிலளித்தார் சிஎஸ்கேவின் கேப்டன் தோனி. இறுதியாக 6 போட்டிகளில் மட்டுமே வெற்றிப்பெற்று ஐபிஎல் சரித்திரத்தில் பிளே ஆஃப்க்கு முன்னேறாமல் வெளியேறியது சிஎஸ்கே. இந்தத் தொடரில் ஒரே ஆறுதல் கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளில் வெற்றிப்பெற்றது சிஎஸ்கே. அதுவம் அந்த மூன்று போட்டிகளிலும் ருதுராஜ் கெய்க்வாடின் அரை சதமும்தான். பஞ்சாபை பந்தாடிய சிஎஸ்கே அந்த அணியையும் தொடரிலிருந்து வெளியேற்றியது.

பஞ்சாப் போட்டிக்கு பின்பு பேசிய தோனி "எங்களது ஒட்டுமொத்த குரூப்பையும் மாற்ற வேண்டியுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளை கணக்கில் கொண்டு மாற்றங்களை கொண்டு வர வேண்டும். எங்களுக்காக 10 ஆண்டுகள் விளையாடிய வீரர்களை கொண்டு ஐபிஎல் தொடரை தொடங்கினோம். அவர்கள் 10 வருடம் நல்ல ஒத்துழைப்பை கொடுத்தார்கள். இனி, அடுத்த தலைமுறையிடம் அணியை கொடுக்க வேண்டியுள்ளது.வலிமையுடன் மீண்டு வருவோம். அப்படி மீண்டு வருவதுதான் எங்களின் வழக்கம்" என தெரிவித்தார்.

தோனியின் இதே கூற்றைதான் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கும் கடந்த சில நாள்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார் அப்போது "புள்ளிகள் பட்டியலை பார்க்கும்போது சிஎஸ்கே அணியின் திறன் முற்றிலுமாக தீர்ந்துவிட்டதாக தெரியும். ஆனால் இந்த அணியை வைத்துக்கொண்டு 2018 இல் கோப்பையை வென்றோம், கடந்தாண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறி தோற்றோம். வயதான வீரர்களை கொண்டு இந்தாண்டு தொடர் கடினமாக இருக்கும் என்றே நினைத்தோம்" என்றார்.

சிஎஸ்கே அணியில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்றே தெரிகிறது. அதிலும் சீனியர் வீரர்கள் நிச்சயமாக இடம்பெற மாட்டார்கள் என்றே தெரிகிறது. அதற்கு ஏற்றார்போல ஷேன் வாட்சனும் ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வுப்பெறுவதாக அறிவித்துள்ளார். சிஎஸ்கே அணியில் சீனியர்கள் என்றால் அது தோனி, டூப்ளசிஸ், இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ் ஆகியோர் இருக்கின்றனர். இதில் டூப்ளசிஸ், தோனி, அம்பத்தி ராயுடுவை தவிர அடுத்த சீசனில் வேறு யாரும் விளையாடமாட்டார்கள் என்றே தெரிகிறது.

மேலும் ஏற்கெனவே சிஎஸ்கேவில் ருதுராஜ் கெய்க்வாட், ஜெகதீசன், மோனு குமார், சாய் கிஷோர், சாம் கரன், கரன் சர்மா ஆகியோர் சிறந்த இளம் வீரர்களாக இருக்கின்றனர். மேலும் அடுத்தாண்டு சிஎஸ்கேவில் பல புதுமுக வீரர்களுக்கும் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அடுத்தாண்டு ஐபிஎல்லில் சென்னைக்கு தலைமைதாங்கும் தோனி, பின்பு அணி தலைமையை இளம் வீரர் ஒருவரிடம் கொடுத்துவிட்டு செல்வார் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com