கோவா தேர்தல் களம்: மனோகர் பரிக்கர் மகனுக்கு ஆதரவு அளிக்க முன்வரும் எதிர்க்கட்சிகள்

கோவா தேர்தல் களம்: மனோகர் பரிக்கர் மகனுக்கு ஆதரவு அளிக்க முன்வரும் எதிர்க்கட்சிகள்
கோவா தேர்தல் களம்: மனோகர் பரிக்கர் மகனுக்கு ஆதரவு அளிக்க முன்வரும் எதிர்க்கட்சிகள்

முன்னாள் கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் மகன் உத்பல் பரிக்கர் சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளதாக அறிவித்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி அவருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளன.

பஞ்சிம் தொகுதியில் போட்டியிட உத்பல் பரிக்கர் வாய்ப்பு கேட்டிருந்தார், ஆனால் பாரதிய ஜனதா கட்சி அந்த தொகுதிக்கு வேறு வேட்பாளரை அறிவித்துவிட்டது. வேறு இரண்டு தொகுதிகளில் ஒன்றை தேர்வு செய்து போட்டியிடுமாறு உத்பல் பரிக்கருக்கு வேறு வாய்ப்பை அளிக்க பாரதிய ஜனதா கட்சி முன் வந்தது. ஆனால் தனது தந்தையின் தொகுதியான பஞ்சிம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என உத்பல் பரிக்கர் உறுதியாக உள்ளார். மனோகர் பாரிக்கர் ஐந்து முறை இந்த தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், கோவா முதல்வராகவும் இருந்த மனோகர் பரிக்கர் மிகவும் பிரபலமான தலைவராக திகழ்ந்தார். பாரதிய ஜனதா கட்சி 2017 ஆம் வருடத்தில் கோவா மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கு மனோகர் பரிக்கர்தான் காரணம் என்பது அந்த மாநில அரசியல் தலைவர்கள் அனைவரும் அறிந்ததே.

இதனால்தான் பாநாஜி என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கோவா தலைநகரான பஞ்சிம் தொகுதியில் போட்டியிட உத்பல் பரிக்கர் விரும்புகிறார். மனோகர் பரிக்கருக்கு மக்களிடையே உள்ள ஆதரவு காரணமாக உத்பல் பரிக்கர் வாக்குகளை கவர்வார் என்றும், இதனால் தான் அவர் சுயேச்சையாக களமிறங்குகிறார் என்றும் கோவா அரசியலில் பேசப்படுகிறது.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி, உத்பல் பரிக்கர் தங்கள் கட்சி சார்பாக போட்டியிட விரும்பினால் வாய்ப்பு அளிக்க தயார் என வலியுறுத்தியுள்ளது. சிவசேனா மற்றும் கோவா தேர்தலில் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் தேசியவாத காங்கிரஸ் கட்சி உத்பல் பரிக்கருக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளன. உத்பல் சுயேச்சையாக போட்டியிட்டால், அனைத்து எதிர்க்கட்சிகளும் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கேட்டுக்கொண்டுள்ளார். உத்பலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போட்டியிடக்கூடாது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் விரும்புகிறது.

பாரதிய ஜனதா கட்சியின் மூக்கை உடைக்க இது சிறந்த வாய்ப்பு என எதிர்க் கட்சிகள் கருதுகின்றன. ஆனால் இதுவரை உத்பல் பரிக்கர் எதிர்க் கட்சிகளின் ஆதரவை ஏற்கவில்லை.

காங்கிரஸ் கட்சி ஏற்கனவே பிற எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி வைக்க மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், பஞ்சிம் தொகுதியில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சி உத்பல் பரிக்ககரை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக பேசப்படுகிறது. பாஜகவிலிருந்து ராஜினாமா செய்வது வெறும் சம்பிரதாயமே என்று உத்பல் பரிக்கர் தெரிவித்துள்ளார். சுயேச்சையாக போட்டியிட, தான் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து ராஜினாமா செய்தாலும், மனதளவில் பாஜக கொள்கைகளை நீக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

- கணபதி சுப்பிரமணியம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com