பெண்களும் பீர் குடிக்கிறார்கள்: மனோகர் பாரிக்கர் கவலை
பெண்கள் பீர் குடிக்கத் தொடங்கியுள்ளது கவலை அளிப்பதாக முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் கவலை தெரிவித்துள்ளார்.
கோவா மாநிலத்தில் முதலமைச்சர் பாரிக்கர் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் போதைப்பொருளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க கடந்த ஆகஸ்ட் மாதம் பாரிக்கர் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக இதுவரை சுமார் 170 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தலைநகர் பனாஜியில் நடைபெற்ற இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பாரிக்கர், “பெண்களும் பீர் குடிக்க தொடங்கியுள்ளதை கண்டு தற்போது நான் அச்சப்பட தொடங்கியுள்ளேன். பொறுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு எல்லை கடந்துள்ளது. தங்களது பிள்ளைகள் போதைப் பொருள் எடுத்துக் கொள்கிறார்களா என்பதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். எல்லா பெண்களை பற்றியும் நான் சொல்லவில்லை” என்றார்.
மேலும், போதைப் பொருள் பழக்கம் முற்றிலும் ஒழிந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை. அதேபோல், கல்லூரிகளில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளதை நான் நம்பவில்லை. சிறிய அளவிலான போதைப் பொருள் பிடிபட்டால் சட்டப்படி 15 நாட்கள் அல்லது ஒரு மாதத்தில் ஜாமீன் கிடைக்கும்” என்று பாரிக்கர் கூறினார்.