கவின் கல்லூரி மாணவர் தற்கொலை விவகாரம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டம் அறிவிப்பு
கவின் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து வரும் 28ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னை சேப்பாக்கத்தில் திருமாவளவன், வேல்முருகன், நடிகர் சத்யராஜ், இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய திருமாவளவன், கவின் கல்லூரி மாணவர் பிரகாஷ், சாதி, மத ரீதியாக மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு தற்கொலைக்கு தூண்டப்பட்டதாகக் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக, சந்தேகத்தின் அடிப்படையில் என்ற பிரிவில் காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பது வேதனையளிப்பதாகவும் தெரிவித்தார்.
இதனை கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்காததாலும் வரும் 28ஆம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

