காந்திக்கு பிறகு அப்துல் கலாமின் சகாப்தம்: வெங்கய்ய நாயுடு புகழாரம்
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடம் ஒவ்வொரு இந்தியனும் பார்க்கவேண்டிய இடம் என பாரதிய ஜனதாவின் குடியரசுத் துணைத்தலைவர் வேட்பாளர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.
அப்துல் கலாம் நினைவு மண்டபம் திறக்கும் நிகழ்ச்சியில் பேசிய வெங்கய்ய நாயுடு, அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறினார். அதனைத் தொடர்ந்து அப்துல் கலாமை புகழ்ந்து பேசிய அவர், ’நான் மத்திய அமைச்சராக இல்லாவிட்டாலும் கலாமின் நினைவிடத்தை அமைப்பதில் ஆரம்பத்திலிருந்தே ஈடுபாடு கொண்டவன் என்ற முறையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரதமர் என்னை அழைத்திருந்தார். அப்துல் கலாம் இந்தியாவை வல்லரசாக பார்க்க விரும்பினார். மகாத்மா காந்திக்கு பிறகு அப்துல் கலாம்தான் மக்களை கவர்ந்தவர். இங்கு கூடியுள்ள நம்மில் பலருக்கு மகாத்மா காந்தியை சந்திக்கவோ, அவர் பேசுவதை கேட்கவோ வாய்ப்பு கிடைத்திருக்காது. ஆனால், கலாமை பார்க்கவும் அவர் பேசுவதையும் கேட்ட நாம் கொடுத்து வைத்தவர்கள். காந்தியின் சகாப்தத்திற்கு பிறகு கலாமின் சகாப்தம்தான். இது என்றென்றும் நினைவு கூறப்படும். நமது மனங்களிலும், வரும் தலைமுறையினரின் மனங்களிலும் இது எதிரொலிக்கும். டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் சமாதியை ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டும். அதைப் போல, ஜாதி, மத, மொழி வேறுபாடில்லாமல் எல்லா இந்தியர்களும் பார்க்கவேண்டிய இரண்டாவது நினைவு மண்டபம் கலாம் நினைவு மண்டபம். ஒவ்வொரு இந்தியரும் இங்கு வந்து இங்குள்ள அருங்காட்சியகத்தைப் பார்க்க விரும்புவார்கள். பார்த்து மாபெரும் ஆத்மாவான அப்துல் கலாமிடமிருந்து ஊக்கம் பெற விரும்புவார்கள்’ எனத் தெரிவித்தார்.