“கோடநாட்டில் சிசிடிவி, மின்சாரம் எதுவும் வேலை செய்யவில்லையா?” - ஆ.ராசா கேள்வி

“கோடநாட்டில் சிசிடிவி, மின்சாரம் எதுவும் வேலை செய்யவில்லையா?” - ஆ.ராசா கேள்வி

“கோடநாட்டில் சிசிடிவி, மின்சாரம் எதுவும் வேலை செய்யவில்லையா?” - ஆ.ராசா கேள்வி
Published on

கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற அன்று சிசிடிவி, போலீஸ், மின்சாரம் என எதுவுமே வேலை செய்யவில்லையா? என்று திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கோடநாடு எஸ்டேட்டில் முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்தச் சம்பவத்தில் காவலாளி பகதூர் கொல்லப்பட்டார். கொள்ளையில் ஈடுபட்ட ஷயான் என்பவரின் மனைவி, குழந்தை உட்பட 5 பேர் மர்மமாக உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, இந்தக் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டவர் என்று கூறப்படும் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜும் விபத்தில் உயிரிழந்தார். மர்மமான முறையில் நடந்த இந்த உயிரிழப்புகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி தெஹல்கா இணையதள முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மேத்யூஸ், புலனாய்வு மேற்கொண்டு அது தொடர்பாக ஆவணப் படம் ஒன்றினை நேற்று செய்தியாளர்கள் முன் வெளியிட்டார். அதில் அமைச்சர்களை எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் வைப்பதற்காக,கோடநாட்டில் இருந்த ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நகை, பணம் இருந்ததாகவும், இந்தக் கொள்ளைக்காக, கனகராஜ் 5 கோடி ரூபாய் பெற்றார் எனவும் கூறப்பட்டிருந்தது.

                      
 இதனையடுத்து, தன் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளதால், அது குறித்து விசாரிக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்திக்க அவர், “அந்த வீடியோவில் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற ஒரு சம்பவத்தில் என்னை சம்பந்தபடுத்தி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ முற்றிலும் உண்மைக்கு மாறானது. இந்தச் செய்தியை வெளியிட்டவர்கள் மீதும், அவர்களின் பின்புலத்தில் இருப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

அதேபோல், அமைச்சர்கள் பலரும் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர். “கோடநாடு விவகாரத்தில் அனைத்து விசாரணைகளும் நடத்தப்பட்டுவிட்டது; விசாரணையில் அரசாங்கம் ஒளிவு மறைவின்றி செயல்பட்டுள்ளது” என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். “கோடநாடு விவகாரத்தில் கதை, திரைக்கதை எழுதி ஆட்சியை கலைக்க நாடகம் நடக்கிறது. முதல்வரை எதிர்க்க தெம்பும், திராணியும் இல்லாதவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்” என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக கொள்கைப் பரப்பு செயலாளருமான ஆ.ராசா இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு கீழ் வரும் காவல் ஆணையரை விசாரிக்கச் சொல்வது சரியாக இருப்பதால், முதல்வர் பதவி விலக வேண்டும் என்று ஆ.ராசா வலியுறுத்தினார்.

மேலும் அவர் பேசுகையில், “கோடநாடு விவகாரத்தில் அனைத்தும் விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். கோடநாடு காவலாளி மரண வழக்கில் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதர்கான சமிக்ஞைகள் இருக்கின்றன. கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளை நடந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டதன் காரணம் என்ன? சிசிடிவி ஏன் வேலை செய்யவில்லை? முன்னாள் முதல்வரின் வீடு என்ற அடிப்படையில் ஒரு போலீஸ் கூட பணியில் இல்லையா?. அதனால், கோடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளைகள் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. 

இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். முதல்வருக்காகத்தான் கொள்ளையில் ஈடுபட்டதாக சயன் பேட்டியளித்தார். கோடநாடு விவகாரத்தில் சயனை அப்ரூவராக மாற்ற வேண்டும். முதல்வர் கொடுத்த மனுவை வைத்தே காவல்துறையினர் விசாரணையை தொடங்க வேண்டும். தெஹல்கா முன்னாள் ஆசிரியர் வெளியிட்ட தகவலுக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று கேட்பது ஏன்?” அவர் வினவினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com