கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்கிறார் சோனியா காந்தி
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 16 ஆம் தேதி நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சோனியாகாந்தி பங்கேற்கிறார்.
கடந்த 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டது. அப்போது, அங்கு அறிஞர் அண்ணா சிலையை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.
இதனையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் இருந்த அண்ணா சிலை சமீபத்தில் அப்புறப்படுத்தப்பட்டது. அண்ணா சிலையை புணரமைக்கப்பட்ட வெண்கல சிலையாக மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதிக்கு வெண்கல சிலை வைப்பதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
அண்ணா அறிவாலயத்தில் புணரமைக்கப்பட்ட அண்ணா சிலையும் கருணாநிதி சிலையும் ஒரே இடத்தில், டிசம்பர் 16 ஆம் தேதி அமைக்கப்படும் என திமுக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அகில இந்திய தலைவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைப்பார்கள் என திமுக தெரிவித்தது.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 16 ஆம் தேதி நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சோனியாகாந்தி பங்கேற்கிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று விழாவில் பங்கேற்க சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார். சோனியா காந்தி ஒப்புதல் அளித்த கடிதத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.