மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்ட ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி யாருக்கு?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்ட ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி யாருக்கு?
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்ட ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி யாருக்கு?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு முதலமைச்சரான தொகுதி ஸ்ரீரங்கம். விஐபி தொகுதியாக பார்க்கப்பட்ட இத்தொகுதியின் கள நிலவரம் என்ன சொல்கிறது?

2011 தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு 1 லட்சத்து 05 ஆயிரத்து 328 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனால் இந்த தொகுதி விவிஐபி தொகுதியாக மாறியது. சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பையடுத்து, 2014-ல் அவர் பதவி இழந்ததையடுத்து 2015ல் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வளர்மதி வெற்றி பெற்றார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட்ட வளர்மதி வெற்றி பெற்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக உள்ளார்.

இத்தொகுதியில் இந்தத் தேர்தலில், அதிமுக சார்பில் கு.ப.கிருஷ்ணன், திமுக சார்பில் பழனியாண்டி, அமமுக சார்பில் சாருபாலா தொண்டமான், ஐஜேகே சார்பில் பிரான்சிஸ் மேரி செல்வராஜ், நாம் தமிழர் சார்பில் செல்வரதி ஆகியோர் போட்டியிடுகிறார்கள். ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி இதுவரை நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் 9 முறை அதிமுகவும், 4 முறை காங்கிரஸ் கட்சியும், திமுக, இந்திய பொதுவுடமை கட்சி, ஜனதா கட்சி தலா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளரான கு.ப. கிருஷ்ணன், 1989ல் ஜெ அணி சார்பில் போட்டியிட்டவர். 1991 தேர்தலில் வென்ற இவர், வேளாண்துறை அமைச்சராக இருந்தார். 2011 தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

திமுக சார்பில் போட்டியிடும் பழனியாண்டி, 14 வயது முதல் கட்சியில் இருப்பவர். 5 ஆண்டு ஒன்றிய இளைஞரணி பொறுப்பிலும், 15 வருடம் ஒன்றியச்செயலாளர் பொறுப்பிலும் இருந்த பழனியாண்டி, 2016 தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் அமைச்சர் வளர்மதியிடம் சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர். தற்போது மீண்டும் இதே தொகுதியில் களம் காண்கிறார்.

அமமுக சார்பில் போட்டியிடும் சாருபாலா தொண்டமான், 2 முறை திருச்சி மாநகராட்சி மேயராக இருந்தவர். தொடக்கத்தில் காங்கிரசிலும், பின்னர் தமாகாவிலும் இருந்த இவர், 2016ல் அதிமுகவில் சேர்ந்தார். ஜெயலலிதா மறைவுக்குப்பின், அமமுகவில் சேர்ந்த சாருபாலா தொண்டமான், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தமாகா சார்பிலும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக சார்பிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது ஸ்ரீரங்கம் தொகுதியில் களம் கண்டுள்ளார்.

மக்கள் நீதிமய்யம் கூட்டணியில் ஸ்ரீரங்கம் தொகுதி ஐஜேகேவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இக்கட்சி சார்பில், பிரான்சிஸ் மேரி செல்வராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் சார்பிலும் செல்வரதி என்ற பெண் வேட்பாளர் களம் காண்கிறார். இருவருக்கும் இதுவே முதல் தேர்தல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com