அந்நியச் செலாவணி மோசடி வழக்கு: நீதிமன்றத்தில் டிடிவி ஆஜர்
அந்நியச் செலாவணி மோசடி வழக்கு விசாரணை தொடர்பாக, எழும்பூர் நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் இன்று ஆஜரானார்.
அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீதான அந்நியச் செலாவணி மோசடி வழக்கு சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று நீதிபதி மலர்மதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நேரில் ஆஜரான டிடிவி தினகரனிடம் குறுக்கு விசாரணைக்கு தயாரா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த டிடிவி தினகரன் குறுக்கு விசாரணைக்கு தாம் தயார் என்றும் அனைத்து சாட்சிகளையும் விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
அதேநேரம், அமலாக்கத்துறை சார்பில் சாட்சிகள் வராததால் கால அவகாசம் கேட்கப்பட்டது. அதையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் அனைத்து சாட்சியங்களும் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.