காணொலிக் காட்சி மூலம் மக்கள் குறைதீர் கூட்டம்; நெல்லை கலெக்டரின் புது முயற்சி!

காணொலிக் காட்சி மூலம் மக்கள் குறைதீர் கூட்டம்; நெல்லை கலெக்டரின் புது முயற்சி!
காணொலிக் காட்சி மூலம் மக்கள் குறைதீர் கூட்டம்; நெல்லை கலெக்டரின் புது முயற்சி!

நெல்லை மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் மூன்றாம் தேதி காணொலி காட்சி மூலம் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அனைத்து துறைசார் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். இதில் பொதுமக்கள் காணொலி மூலம் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம் என நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒவ்வொரு திங்கள்கிழமையும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர் கூட்டம் கொரோனா  நோய்த் தடுப்பு பணிகளை முன்னிட்டு தொடர்ந்து நடத்த இயலாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் திங்கள் கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தை வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் தேசிய தகவலியல் மையத்தின் (NIC) தொழில்நுட்ப உதவியுடன் காணொலிக் காட்சி வாயிலாக நடத்திட திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மனுக்களை இணையதளத்தில் பதிவு செய்ய

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் https://tirunelveli.nic.in/  என்ற இணையதளத்தின் முதல் பக்கத்தில் District Collector’s Public Grievance meeting through Video Conference (மாவட்ட ஆட்சியரின் காணொலிக் காட்சி வாயிலான மக்கள் குறைதீர் கூட்டம்) என்பதைத் தெரிவுசெய்து Petition Register  - கோரிக்கைப் பதிவு என்பதில் தங்களது கோரிக்கை தொடர்பான விவரங்களை அனைத்து நாட்களிலும் எந்த நேரத்திலும்  பதிவு செய்யலாம்.

ஒவ்வொரு திங்கள்கிழமை அன்றும் காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற உள்ள மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் அனைத்து துறைசார் அலுவலர்களும் அலுவலகத்தில் இருந்தபடியே பங்கேற்பார்கள்.

இந்த காணொலிக் காட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் பொதுமக்கள் தங்கள் கைபேசியில் https://tirunelveli.nic.in/ என்ற இணையதளத்திற்கு சென்று, காணொலிக் காட்சி வாயிலான மக்கள் குறைதீர் கூட்டம் (GDP meeting with District Collector through Video Conference) என்பதை தேர்வு செய்ய வேண்டும். பின்பு தங்கள் பெயர் மற்றும் ஊர் ஆகியவற்றைப் பதிவு செய்து, காணொலிக் காட்சிக்குள் நுழைந்து, தங்களது பெயர் குறிப்பிட்டு அழைக்கப்படும் வரை காத்திருக்க வேண்டும்.

பெயர் அழைக்கப்படும் போது தங்களது கைபேசியின் வழியாகவே மாவட்ட ஆட்சித் தலைவருடன் காணொலிக் காட்சியில் நேரடியாக தங்களுடைய கோரிக்கை தொடர்பான விபரங்களை சுருக்கமாக தெரியப்படுத்தலாம். அதையடுத்து தங்களுடைய கோரிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் காணொலிக் காட்சி வாயிலாகவே விசாரித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com