‘இது மூலிகை மைசூர் பாகு.. சாப்பிட்டால் ஒரே நாளில் கொரோனா குணமாகும்’: சிக்கிய இனிப்புக்கடை

‘இது மூலிகை மைசூர் பாகு.. சாப்பிட்டால் ஒரே நாளில் கொரோனா குணமாகும்’: சிக்கிய இனிப்புக்கடை
‘இது மூலிகை மைசூர் பாகு.. சாப்பிட்டால் ஒரே நாளில் கொரோனா குணமாகும்’: சிக்கிய இனிப்புக்கடை

மூலிகைகள் கலந்த மைசூர் பாகு உண்டால் கொரோனா ஒரே நாளில் குணமாகும் என தெரிவித்து விற்பனை செய்து வந்த இனிப்புக் கடையின் உரிமத்தை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.

தற்போது நாடு முழுவதும் கொரோனா என்ற வார்த்தையே அனைவரது மத்தியிலும் அதிகமாக உச்சரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. தற்போதைக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்து கொள்ளவேண்டும், சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது. அந்த வகையில் பாரம்பரிய உணவுகள், நிலவேம்பு, மூலிகை கஷாயம் போன்றவற்றை வீட்டிலேயே மக்கள் அதிகமாக பயன்படுத்த துவங்கியுள்ளனர். 

இந்நிலையில் கோவை சின்னியம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் இனிப்பு கடை ஒன்று மூலிகைகள் கலந்த மைசூர் பாகு தயார் செய்து அதை மக்களுக்கு விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. இதில் இந்த மைசூர்பாகுவை உண்டால் ஒரே நாளில் கொரோனா குணமாகும் எனவும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் உணவு பாதுகாப்பு துறைக்கு கிடைக்கவே அதிகாரிகள் இனிப்பு நிறுவனத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

ஆய்வில் முறையாக எந்த மூலிகைகள் பயன்படுத்தப்படுகிறது என உரிமையாளர் தெரிவிக்காததால் அவரது விற்பனை உரிமம் ரத்து செய்யப்பட்டு கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.

மேலும் சித்த மருத்துவ அதிகாரிகளும் மைசூர் பாகுவில் பயன்படுத்தப்பட்ட மூலிகைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு கடை உரிமையாளர் ஸ்ரீ ராமிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து மூலிகை மைசூர் பாகுவை தயாரிக்க பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். முறைப்படி சித்த மருந்துகள் பயன்படுத்த அரசு சித்த மருத்துத்துறையில் முறையான அனுமதி பெறாததாலும், மைசூர்பாகுவை உண்டால் ஒரே நாளில் கொரோனா குணமாகும் என மக்களிடம் தவறான தகவலை பரப்பிய காரணத்தாலும் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் சித்த மருந்து ஆய்வாளர் கீதா தெரிவித்துள்ளார்.

இனிப்பு கடை நடத்திவரும் ஸ்ரீ ராம் கடந்த 30 ஆண்டுகளாக கோவையில் 8 இடங்களில் இனிப்பு கடை நடத்தி வருகிறார். கேரட் மைசூர் பாகு, பீட்ரூட் மைசூர் பாகு வரிசையில் மூலிகை மைசூர்பாவையும் தயாரித்ததாகவும், மக்கள் சாதாரணமாக பயன்படுத்தும் மூலிகைகளை கலந்து கொரோனா காலத்தில் மைசூர்பாகுவை தயாரித்ததாக கூறுகிறார் இனிப்பு வியாபாரி ஸ்ரீ ராம். மேலும் சளி, இருமல், காய்ச்சல் குணமாகும் மூலிகைகள் கலந்து மைசூர்பாவை செய்து மக்கள் பயனடையும் எண்ணத்திலேயே பெரும்பாலானோருக்கு இலவசமாக கொடுத்து வந்ததாகவும் தெரிவிக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com