பறக்கும் படை சோதனை: திருச்சி மாவட்டத்தில் சாக்குமுட்டையில் பதுக்கிய ரூ. 1 கோடி பறிமுதல்
திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியில் ஒரு சாக்குமூட்டையில் இருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கரூர் முதல் திருச்சி வரையிலான புறவழிச்சாலையில் பெட்டவய்த்தலை பாலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சென்ற போது, ஒரு கார் அருகில் சாக்குமூட்டையில் பணம் இருப்பது கண்டறியப்பட்டு பணம் பறிமுதல் செய்யபப்ட்டது. அருகிலிருந்த கார் முசிறி சட்டபேரவை தொகுதி அதிமுக எம் எல் ஏவும் தற்போதைய வேட்பாளருமான செல்வராஜுக்கு சொந்தமானது என தெரியவந்தது. காரில் வந்த தொட்டியத்தை சேர்ந்த அதிமுக மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 4 பேரிடம் விசாரணை நடத்திய போது பணத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என கூறியுள்ளனர். தாங்கள் அவ்வழியே வந்தபோது இரண்டு கார்களில் இருந்தவர்கள் சண்டை போட்டுக்கொண்டிருந்ததாகவும், காரை நிறுத்தி பார்த்தபோது பணமூட்டை இருந்ததாகவும் காவல்துறையிடம் கூறியுள்ளனர். இதில் சந்தேகமடைந்த பறக்கும்படையினர் பணத்தை பறிமுதல் செய்ததுடன் நான்கு பேரையும் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சிவராசுவின் உத்தரவுபடி நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.