கறுப்பு சட்டையுடன் ஏராளமானோர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி
ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவராக விளங்கிய முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு இதே நாளில்தான் உயிரிழந்தார். அவரின் முதலாம் ஆண்டு நினைவுதினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி ஏராளமான அதிமுக தொண்டர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சென்னை வந்துள்ளனர். அவர்கள் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அஞ்சலி செலுத்த வந்துள்ளவர்கள் பெரும்பாலும் தங்களது துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக கறுப்புச் சட்டையை அணிந்துள்ளனர். அஞ்சலி செலுத்த ஏராளமானோர் மெரினாவில் குவிந்துள்ளதால் அங்கு அதிகப்படியான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அஞ்சலி செலுத்துவதற்காக வந்த ஒரு பெண் இதுகுறித்து கூறும்போது, “ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த நேற்று இரவே பேருந்து மூலம் சென்னைக்கு புறப்பட்டு வந்தோம். இன்று அஞ்சலி செலுத்தியுள்ளோம். ஜெயலலிதா இல்லாத தமிழகத்தை எங்களால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. மிகவும் கஷ்டமாகத் தான் இருக்கிறது” என வேதனையுடன் கூறினார்.

