தவறை சரிசெய்யவே 5 ஆண்டுகள் : காங்கிரஸ் மீது மோடி விமர்சனம்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறுகளை சரிசெய்வதற்கே கடந்த ஐந்து ஆண்டுகளை செலவழித்தாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தேர்தல் பரப்புரை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம், கோண்டியாவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தாம் வாக்குறுதி அளித்த பணிகளை முடித்துவிட்டாக ஒருபோதும் கூறியதில்லை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறுகளை சரிசெய்வதற்கே கடந்த ஐந்து ஆண்டுகளை செலவழிதேன் என்றார். எனினும், பல முக்கிய பணிகள் முடிக்கப்பட்டுவிட்டதாக மோடி தெரிவித்தார்.
பாகிஸ்தானின் பாலாகோட் மீதான தாக்குதலை மக்கள் மறந்துவிட்டதாக பலர் கூறி வருவதாகவும், ஆனால், அதை மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள் என்று மோடி விமர்சனம் செய்தார். மேலும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பொய்கள் நிறைந்த ஆவணம், அந்த தேர்தல் அறிக்கை ஊழலுக்கு ஊக்கம் தருவதாக அமைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். தேசதுரோக சட்டத்தை ரத்து செய்வதன் மூலம் காங்கிரஸ் கட்சி ஏமாற்றுபவர்களின் பக்கம் இருப்பதாகவும் மோடி குற்றம்சாட்டினார்.