ஓமலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ: நோய் தொற்று அச்சத்தில் மக்கள்
ஓமலூர் பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு ஓமலூர் நகரின் பல்வேறு பகுதிகளை புகை சூழ்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் பட்டாசு வெடித்த இளைஞர்களால் தீ விபத்து ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
மிகப்பெரிய பேரூராட்சியான சேலம் மாவட்டம் ஓமலூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. ஓமலூர் நகரை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளும் நகரைபோல வளர்ச்சியடைந்துள்ளன. அதனால், ஓமலூர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு தினமும் பத்து டன் குப்பைகள் சேகரிக்கபடுகிறது.
இந்நிலையில் நகர் முழுக்க சேகரிக்கப்படும் குப்பைகளை 9வது வார்டில் உள்ள நேரு நகர் சரபங்கா ஆற்றங்கரை ஓரத்தில் கொட்டப்படுகிறது. அதனால் சரபங்கா ஆறும், சுற்றுவட்டார மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம், தற்பொழுது மக்கும் குப்பை மக்காத குப்பைகளை பிரித்து எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், குப்பை கிடங்கு இருக்கும் பகுதியில் இளைஞர்கள் பட்டாசுகளை வெடித்துள்ளனர். அப்போது குப்பை கிடங்கில் பட்டாசு தீ பொறிகள் விழுந்தாக கூறப்படுவதோடு மர்ம நபர்கள் குப்பை கிடங்கில் தீ வைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது. குப்பைகளில் பிடித்துக்கொண்ட தீ கிடங்கு முழுவதும் பரவியது.
குப்பை கிடங்கில் இருந்து கிளம்பிய புகை நகர் முழுவதும் பரவியதோடு அருகில் உள்ள கிராமப்பகுதிகளுக்கும் பரவியது. இந்த கரும்புகையால் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புகையை சுவாசிப்பதால் நோய் தொற்றுகள், மூச்சு திணறல், புற்றுநோய் அபாயம் ஏற்படும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து ஓமலூர் தீயணைப்பு வீரர்களும், பேரூராட்சி பணியாளர்களும் தீயை அணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.