வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை: வனத்துறை எச்சரிக்கை
வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்க கூடாது என காட்டை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு நேரில் சென்று ஒலி பெருக்கி மூலம் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். காட்டுத்தீ உள்ளிட்ட அசம்பாவிதங்களை தடுக்க பல்வேறு குழுக்களாக பிரிந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காட்டை ஒட்டியுள்ள கிராம மக்கள் வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலோ காட்டுத்தீ பரவ காரணமாகும் வகையிலோ பட்டாசுகளை வெடிக்க கூடாது என கிராமம் கிராமமாக சென்று ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தி வரும் வனத்துறையினர் இப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை வன கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி காட்டெருமை என ஏராளமான வன விலங்குகள் உள்ளன. தீபாவளி பண்டிகையின் போது காட்டை ஒட்டியுள்ள கிராமங்களில் அதிக சப்தத்துடன் வெடிக்கப்படும் பட்டாசுகளால் இந்த காட்டுயிர்கள் கடுமையாக பாதிக்கப்படும்.
தொடர்ச்சியாக எழும் வெடி சப்தங்களால் காட்டின் அமைதி சீர்குலைந்து விலங்கினங்கள் அங்கும் இங்கும் ஓட துவங்கும். இது போன்ற சூழலில் அவற்றின் இயல்பான வழிதடம் மாறுவதால் காட்டை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைந்து விடும் ஆபத்துகளும் உள்ளன. மேலும் மேலே சென்று வெடிக்கும் ராக்கெட் போன்ற பட்டாசுகள் காட்டுத்தீயை உருவாக்கி விடும் அபாயமும் உள்ளது.
எனவே இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க மலையடிவாரம் மற்றும் வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு நேரில் செல்லும் வனத்துறையினர் ஒலி பெருக்கி மூலம் அங்குள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்றும் காட்டுத்தீ பரவும் வகையிலான பட்டாசுகளை கண்டிப்பாக தவிர்க்குமாறும் அறிவுறுத்தி வருகின்றனர்.

