தத்தெடுத்த பெற்றோர் மரணம்; 15 ஆண்டுகளுக்குப் பின் சொந்த பெற்றோரிடம் சேர்ந்த மகள்!
புதுக்கோட்டை அருகே தத்தெடுத்த தாய் தந்தை இறந்துவிட, ஆதரவின்றி தவித்த சிறுமியை 15 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே ராஜாளிபட்டியை சேர்ந்த குஞ்சன்- பிச்சையம்மாள் தம்பதிக்கு, திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு மருத்துவமனையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு துர்காதேவி என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. அப்போதைய சூழலில் அந்தப் பெண் குழந்தையை அவரது பெற்றோர்களால் வளர்க்க முடியாத சூழலால், புதுக்கோட்டையை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து அந்தக் குழந்தையை முறைப்படி தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வளர்ப்புத் தந்தை சுப்பிரமணியன் மற்றும் வளர்ப்பு தாய் ஆகியோர் ஒரே நேரத்தில் மரணமடைந்ததால், துர்காதேவியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து உள்ளார்.
அவரது வளர்ப்பு தந்தை சுப்பிரமணியன் தான் இறப்பதற்கு முன்னால் துர்கா தேவியை விராலிமலை அருகே உள்ள ராஜாளிபட்டி எனும் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியிடம் தத்தெடுத்த விவரங்களைக் கூறியுள்ளார். அதனடிப்படையில் துர்காதேவி விராலிமலை காவல் நிலையத்தில் தனது உண்மையான தாய் தந்தையரை கண்டறிந்து தருமாறு உருக்கத்தோடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த சிறுமியின் வேண்டுகோளை ஏற்ற விராலிமலை காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் லலிதா பிரியதர்ஷினி, மற்றும் திருவேங்கடம் ஆகியோர் ராஜாளிபட்டிசென்று துர்கா தேவியின் பெற்ற தாய் தந்தையரான பிச்சம்மாள் குஞ்சன் ஆகியோரை கண்டறிந்து அவர்களை காவல் நிலையம் வரவழைத்து, 15 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுக்கு குழந்தையை தத்து கொடுத்த விவரம் குறித்து கேட்டறிந்தனர்.
அவர்களும் தாங்கள் தத்துக் கொடுத்த நிகழ்வை கூறவே மீண்டும் அந்தச் சிறுமி பெற்றோருடன் வாழ விரும்புவதாக தெரிவித்தார். இதனையடுத்து துர்காதேவியை மீண்டும் அவரது பெற்ற பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
15 ஆண்டுகளுக்கு முன்பு தத்து கொடுக்கப்பட்ட மகளை மீண்டும் பார்த்த மகிழ்ச்சியில் அவரது பெற்றோர்களும், வளர்ப்பு தாய்-தந்தையை இழந்த சோகத்தில் இருந்த துர்காதேவிக்கு மீண்டும் சொந்த தாய் தந்தை கிடைத்ததால் அவரும் மகிழ்ச்சியுடன் தனது பெற்றோரோடு காரில் ஏறி சென்றார்.
இருவரையும் இணைத்து வைத்த விராலிமலை காவல் நிலைய உதவி ஆய்வாளர்களின் இந்த மனிதநேயச் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.