திமுகவை நம்பி அரசைக் கலைக்க முயற்சி: முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு
ஒரு சிலர் திமுகவை நம்பி தமிழக அரசைக் கலைக்க முயற்சிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசுக்கு நாங்கள் அடிமைகள் இல்லை என்றும், இணக்கமாக மட்டுமே செயல்படுகிறோம் என்றும் விளக்கமளித்துள்ளார். நாமக்கல்லில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, 382 கோடி ரூபாய் மதிப்பில் 36 பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக கூறிய அவர், 6 ஆண்டுகளில் அரசு செய்த சாதனைகளை சொல்ல நேரம் போதாது என்றார்.
விவசாய கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளதாக கூறிய அவர், மகசூல் பாதித்த விவசாயிகளுக்கு கடன் உதவி அளிக்கப்பட்டுள்ளதாவும், 44 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருவதாக கூறிய முதலமைச்சர், இந்த ஆட்சியில் என்ன குறை உள்ளது என்று கூறுங்கள் பார்க்கலாம்? என்றும் கேள்வி எழுப்பினார்.