மத்தியில் ஆட்சி அமைப்பதற்காக காங்கிரஸின் ஆதரவை கூட்டாட்சி முன்னணி கோரும் என்றும், ஆனால் தலைமை வகிக்கும் பொறுப்பை காங்கிரஸிடம் அளிக்காது என தெலங்கானா ராஷ்டீரிய சமிதி தெரிவித்துள்ளது.
மத்தியில் பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டாட்சி முன்னணியை அமைக்கும் முயற்சியில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ளார். இதற்காக, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட மாநிலக் கட்சித் தலைவர்களை அவர் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.எஸ். செய்தி தொடர்பாளர் ரசூல் கான், ஆட்சி அமைப்பதற்கு கூட்டாட்சி முன்னணிக்கு போதிய எம்.பி.க்கள் இல்லை என்றால் காங்கிரஸின் ஆதரவு கோரப்படும் என்றார். அதேநேரத்தில் தலைமை பொறுப்பு காங்கிரஸிடம் வழங்கப்படாது என்றும், மத்திய அரசை வழிநடத்தும் பொறுப்பு மாநில கட்சிகளிடமே இருக்க வேண்டும் என்பதில் டி.ஆர்.எஸ். உறுதியாக இருப்பதாகவும் ரசூல் கான் தெரிவித்தார்.
மேலும், பிரதமர் பதவி கூட்டாட்சி முன்னணியில் உள்ள மாநில கட்சிக்கே அளிக்கப்படும் என்றும், கருத்து ஒற்றுமை அடிப்படையில் பிரதமர் யார் என முடிவு செய்யப்படுவார் என்றும் அவர் கூறினார். காங்கிரஸுக்கு 180 தொகுதிகளுக்கு மேல் கிடைக்கவில்லை என்றால், அந்த கூட்டணியில் திமுக இருந்து பலனில்லை என்ற ரசூல் கான், அதனால் கூட்டாட்சி முன்னணிக்கு திமுக வர வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.