அரசு அதிகாரிபோல் நடித்து கடைகளில் வசூல் : மர்ம ஆசாமியை கைது செய்த போலீஸ்

அரசு அதிகாரிபோல் நடித்து கடைகளில் வசூல் : மர்ம ஆசாமியை கைது செய்த போலீஸ்
அரசு அதிகாரிபோல் நடித்து கடைகளில் வசூல் : மர்ம ஆசாமியை கைது செய்த போலீஸ்

மதுரையில் அரசு அதிகாரிபோல நடித்து கடைகளில் பணம் வசூல் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியில் உள்ள மொத்த விற்பனை செய்யும் மளிகை கடைகளுக்கு சென்ற நபர் ஒருவர் தான் தொழிலாளர் நலத்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும், கடையை ஆய்வு செய்ய வந்துள்ளதாகவும் உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளார். அத்துடன் கடையில் கொரோனா விதிமுறை மீறல் உள்ளது எனவும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க பணம் தர வேண்டும் எனவும் மிரட்டியுள்ளார்.

அந்த வகையில் மளிகை கடை உரிமையாளரான தண்டபாணி என்பவரை மிரட்டிய அந்த நபர், பணம் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அதிகாரி எனக்கூறிய நபர் மீது சந்தேகம் அடைந்த தண்டபாணி, தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அதற்கு அவ்வாறு அதிகாரி யாரும் பணியில் நியமிக்கபடவில்லை என கூறியுள்ளனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, விரைந்து வந்து போலீசார் அந்த நபரை பிடித்தனர்.

இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், அந்த நபர் ராமநாதபுரத்தை சேர்ந்த ஜெய் சுதின்(54) என்பதும், 10வது மட்டுமே படித்து விட்டு கடைகளுக்கு நோட்டு புத்தகங்கள் விற்பனை செய்பவர் என்பதும் தெரியவந்தது. அத்துடன் அதிகாரி போல் நடித்து பல்வேறு பகுதிகளில் மோசடி செய்து பணம் பறித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ராமநாதபுரத்தையே கலக்கி விட்டு, தற்போது மதுரை பகுதியில் உள்ள கடைகளில் வசூல் வேட்டையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலி அதிகாரியான ஜெய்சுதினை கைது செய்த ஊமச்சிகுளம் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com