2 நாட்களில் ஆளுநர் அழைப்பார்: டிடிவி தரப்பு நம்பிக்கை
அடுத்த இரண்டு நாட்களில் ஆளுநர் எங்களை அழைத்துப்பேசுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இல்லாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டிடிவி தினகரன் ஆதரவாளரும் எம்.எல்.ஏவுமான தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘10 எம்எல்ஏ-க்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஊருக்கு சென்றிருந்தார்கள். டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை குறையவில்லை. தமிழகத்தில் முதல்வர் மாற்றம் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். நாளை நடைபெறும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் யாரும் கலந்துகொள்ள மாட்டோம். இன்னும் 2 நாட்களில் ஆளுநர் எங்களை அழைத்து பேசுவார் என்ற நம்பிக்கை உள்ளது. திமுக போராட்டத்தில் பங்கேற்பதாக கூறுவது திவாகரனின் தனிப்பட்ட கருத்து. பொதுச்செயலாளர் அல்லது துணைப்பொதுச்செயலாளர் ஆகியோரின் கருத்துப்படியே எங்களது நிலைப்பாடு அமையும்’ எனத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ‘ மாநில பாடத்திட்டம் மூலம் மருத்துவ கலந்தாய்வை நடத்த வேண்டும். அனிதா குடும்பத்தினரை சந்திக்க முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு துணிச்சல் இல்லை’ எனக்கூறினார்.

