ஆசியாவிலேயே இதுதான்.. பெண்களால் மட்டுமே நடத்தப்படும் பழமையான சந்தை எங்கு இருக்கு தெரியுமா?

ஆசியாவிலேயே இதுதான்.. பெண்களால் மட்டுமே நடத்தப்படும் பழமையான சந்தை எங்கு இருக்கு தெரியுமா?
ஆசியாவிலேயே இதுதான்.. பெண்களால் மட்டுமே நடத்தப்படும் பழமையான சந்தை எங்கு இருக்கு தெரியுமா?

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் பெரும்பாலும் சுற்றுலாத்தலங்களாகவே அறியப்படுவது வாடிக்கை. டிராவலர்களின் முக்கியமான டெஸ்டினேஷன் பகுதிகளாக காணப்படும் வடகிழக்கு மாநிலங்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றிப்பார்க்க ஆட்கள் வருவதுண்டு.

சுற்றுலாத்தலங்களை காட்டிலும் நாட்டின் வடகிழக்கு மாநிலங்கள் சமூக வளர்ச்சியில், பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான விவகாரங்களுக்கு பிரசித்தி பெற்றதாகவும் வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்றன. அதில் மணிப்பூர் மாநிலமும் ஒன்று. குறிப்பாக மணிப்பூரின் தலைநகரான இம்பாலை சுற்றி இருக்கும் 9 மலைகளும், அதன் பாரம்பரியம், கலாசாரம், விளையாட்டு உள்ளிட்டவற்றோடு ஆசியாவின் மிகப்பெரிய 500 ஆண்டுகள் பழமையான பெண்கள் சந்தையையும் கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது.

இம்பாலில் உள்ள இந்த பெண்கள் சந்தைக்கென வரலாற்றில் தனி இடமுண்டு. பெண்களால் உருவாக்கப்பட்டு பெண்களாலேயே நடத்தப்பட்டு வருகிறது இந்த மார்க்கெட். இதனை Ima Keithel என்றும் அழைப்பதுண்டு. அதாவது இமா என்றால் அம்மா, கெய்த்தேல் என்றால் பஜார் என்று பெயர். இம்பாலில் உள்ள குவைராம்பந்த்தில் அமைந்திருக்கிறது இந்த பஜார்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தையாக இருக்கும் இங்கு 5000க்கும் அதிகமான பெண்கள் கடை நடத்த உரிமம் வைத்திருக்கிறார்கள். இந்த லைசென்ஸ் அவரவர் குடும்பம் வம்சாவழிகள் தவிர மற்ற வியாபாரிகளுக்கு வழங்கப்படுவதில்லையாம்.

16ஆம் நூற்றாண்டு முதலே இந்த பெண்களால் நிர்வகிக்கப்படும் மார்க்கெட் மணிப்பூரில் நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக சந்தை வேலைகளில் ஆண்களே ஈடுபடுவது வழக்கமாக இருக்கும். ஆனால் மணிப்பூரின் மைத்தி பிரிவைச் சேர்ந்த ஆண்கள் அந்த காலகட்டத்தில் மன்னர்களிடம் பணியாற்றியதாலும், சீனா, பர்மா உடனான போர்களில் ஈடுபட்டதாலும் வீட்டு நிர்வாகம் மைத்தி சமூக பெண்கள் வசம் சென்றது.

ஆகையால் விவசாயம் பார்த்து வந்த அச்சமூக பெண்களிடமே, அந்த விளைப்பொருட்களை சந்தையில் கொண்டுவந்து விற்கும் பொறுப்பும் இருந்தது. இப்படியாக படிப்படியாக தொடங்கியதுதான் இந்த பெண்கள் சந்தை என்ற ’இமா கெயித்தேல்’.

இதன் மூலம் பெண்களின் தொழில் முனைவோர் திறனும் வளர்ந்ததோடு, பெண்களுக்கான அதிகாரமிக்கத் தலமாகவும் இமா கெயித்தேல் மாறியது. இந்த மார்க்கெட்டில் கடை நடத்த திருமணமான பெண்களுக்கு மட்டுமே அனுமதியுண்டு. மணமான பெண்கள் தாங்கள் கடை நடத்துவதற்கான கடனை அவர்களுக்கான சங்கத்திலிருந்து பெற்றுக்கொண்டு பின்னர் அதனை அடைத்துக்கொள்ளும் வசதிகளும் இருக்கின்றன.

இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த இம்பால் பெண்கள் மார்க்கெட்டில் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி நிலவிய நிலநடுக்கத்தால் உருக்குலைந்தது. அதன் பிறகு 2 ஆண்டுகளில் இந்த பெண்கள் மார்க்கெட் வேறு இடத்தில் கட்டப்பட்டதை அடுத்து அங்கு பெண்கள் தங்களது வியாபாரத்தை நடத்தி வருகிறார்கள்.

ஒரு நாளைக்கு 6,000 முதல் 10,000 ரூபாய் வரை பெண்கள் வருமானம் ஈட்டக்கூடிய இந்த மார்க்கெட்டில் ஆண்கள் பொருட்களை வாங்க மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த சந்தையில் காய்கறி, பழங்கள், ஜவுளி, பொம்மைகள், மளிகை பொருட்கள், மீன் உள்ளிட்ட இறைச்சிகள் போன்ற பலவும் விற்கப்படுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com