தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு ! நிஜமா ? மாயையா ?

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு ! நிஜமா ? மாயையா ?

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு ! நிஜமா ? மாயையா ?
Published on

17 ஆவது மக்களவை தேர்தலுக்கான இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதனையடுத்து நாடே எதிர்பார்த்து காத்திருந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நேற்று மாலை 6.30 மணிக்கு வெளியானது. இதில் பெரும்பாலும் பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்கும் என கருத்துக் கணிப்பு தகவல்கள் தெரிவித்தன. மேலும் தமிழகத்தில் திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நாட்டிலேயே உத்தரப்பிரதேசத்தில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என கூறப்பட்டிருந்தது. இதனால் பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் கொஞ்சம் அதிர்ச்சியில்தான் இருக்கிறது. 

தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, “தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வதந்திகளை நான் நம்ப மாட்டேன்" என்று தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சசிதரூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் " தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் எல்லாம் பொய். உலகளவில் கருத்துக் கணிப்புகள் ஏதும் உருப்படியாக இருந்தததில்லை. நாங்கள் 23 ஆம் தேதி வரை காத்திருப்போம்" என தெரிவித்திருந்தார். மேலும் சமூக வலைத்தளங்களிலும் கருத்துக் கணிப்புகள் உண்மையா பொய்யா, நம்பலாமா வேண்டாமா போன்ற விவாதங்கள் நடந்து வருகின்றன.

இந்தியாவில் கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு ஜோசியம் பலிச்சிருக்கிறதா என்று பார்க்கலாம். 1998 இல் பாஜக ஆட்சியமைக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறின. பாஜக 252 இடங்களையும் காங்கிரஸ் 166 இடங்கள் பிடிக்கும் என தெரிவித்தன. அதன்படியே பாஜக கூட்டணி கட்சிகள் உதவியுடன் ஆட்சியமைத்தது. அப்போது வாஜ்பாய் பிரதமரானார். ஆனால் அந்த ஆட்சி 13 மாதமே நீடித்தது. பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக தனது ஆதரவை விலக்கிக்கொண்டதால் ஆட்சி கவிழ்ந்தது.

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக ஆட்சியமைக்கும் என தகவல் வெளியானது. பாஜக 296 இடங்களையும் காங்கிரஸ் 134 இடங்கள் பிடிக்கும் என தெரிவித்தன. அதன்படியே வாஜ்பாய் மீண்டும் பிரதமரானார், அப்போது பாஜகவுக்கு தமிழகத்தில் இருந்து கூட்டணிக்கு கைகொடுத்தது திமுக.

2004 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என தகவல் வெளியானது. பாஜக 296 இடங்களையும் காங்கிரஸ் 134 இடங்கள் பிடிக்கும் என தெரிவித்தன. ஆனால் முடிவுகள் வேறு மாதிரியானது. ஆம் இறுதியில் பாஜக 189, காங்கிரஸ் 222 பெற்று கூட்டணி கட்சிகள் உதவியுடன் ஆட்சியமைத்தது. பல்வேறு, சர்ச்சைகளுக்கு பின்பு மன்மோகன் சிங் பிரதமரானார். இம்முறை கருத்துக் கணிப்பு பொய்த்துப் போனது.

2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், பாஜகவும் காங்கிரஸும் சரிசமமான தொகுதிகளை கைப்பற்றும் என்று சில ஊடகங்களும். பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று சில ஊடகங்களும் முடிவுகளை வெளியிட்டன. ஆனால் முடிவில் பாஜக 159 இடங்களையும், காங்கிரஸ் 262 இடங்களையும் பிடித்தது. இதனையடுத்து இரண்டாவது முறையாக மன்மோகன் சிங் பிரதமரானார்.

2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், ஏறக்குறைய அனைத்து ஊடகங்களும் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என தெரிவித்திருந்தன. பாஜக 336 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிப் பெற்றது. காங்கிரஸ் 59 இடங்களை கைப்பற்றி வரலாற்று தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து பாஜக தனிப்பெரும் பலத்துடன் ஆட்சியமைத்து நரேந்திர மோடி பிரதமரானார்.

ஆகமொத்தம் கருத்துக் கணிப்புகள் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. பலமுறை கருத்துக் கணிப்புகள் தோல்வியடைந்துள்ளன. எனவே, இப்போதும் மே 23 ஆம் தேதி வரை காத்திருப்பதே சரியானதாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com