‘திருடனுக்கு பதில் ஹெச்.ராஜாவையே மக்கள் உதைப்பார்கள்’: இளங்கோவன் விமர்சனம்!
ஐபிஎல் போட்டியை நிறுத்த வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை என காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த இளங்கோவன், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது. தமிழிசை சவுந்தரராஜன் மூன்று வார காலத்திற்குள் காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று சொல்லியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியினருக்கு பொய் சொல்வதே வழக்கமாகி விட்டது. மோடி விரைவில் தமிழகம் வரும் போது, அவருக்கு பாடம் கற்பிக்கப்படும். ஆளுங்கட்சியான அதிமுக பாரதிய ஜனதா கட்சியின் காலடியில் உட்கார்ந்துள்ளது. இவர்கள் உண்ணாவிரதம் இருப்பது வெறும் கண்துடைப்பு” என்று கூறினார்.
மேலும் “பெரியார் சிலை உடைப்பு குறித்து பேசிய விவகாரத்துக்கு பின் தமிழக மக்கள் திருடனையும், ஹெச்.ராஜாவையும் பார்த்தால் திருடனை விட்டுவிட்டு, ஹெச்.ராஜாவை உதைக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் பிரச்னை தொடர்பாக, சென்னையின் ஒதுக்குப்புறமாக நடக்கக்கூடிய ஐபிஎல் மேட்சை நிறுத்தவேண்டும் என்பது ஏற்புடையது அல்ல. மத்திய அரசாங்கம் பொருளாதார கொள்கைகளில் பெரிய அளவில் தோல்வி அடைந்துள்ளது. உலகத்திலேயே எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு பெட்ரோல், கேஸ் விலை இந்தியாவில் உயர்ந்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்தியஅரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகுல்காந்தி கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.