’எல்லோரும் கவனமாக இருங்கள், கொரோனா கொடியது’ - திருமாவளவன் உருக்கமான வேண்டுகோள்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் சகோதரி பானுமதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், " எல்லோரும் கவனமாயிருங்கள் ; கொரோனா கொடியது " என்று ஒவ்வொரு நாளும் முகநூல் நேரலையில் கெஞ்சுவேன். ஆனால், அக்காவைப் பற்றி கவனமில்லாமல் இருந்துவிட்டேனே. என்னை என்னால் ஆற்றுப்படுத்த இயலவில்லை. மீண்டும் வேண்டுகிறேன், எச்சரிக்கையாய் இருங்கள் 'கொரோனா கொடியது' என்று தொண்டர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தன் சகோதரி குறித்து அவர் உருக்கமாக எழுதியுள்ளார். அதில் அவர், "எனது உடன்பிறந்த தமக்கை கு.பானுமதி என்கிற வான்மதி எனக்கு 'அக்கா என்னும் அம்மா ' ! அவர் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தனக்காக வாழாமல் எனக்காக வாழ்ந்தவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "மீண்டு வந்துவிடுவார் என்று வலுவான நம்பிக்கையுடன் இருந்தேன். கடந்த ஜூலை 22ஆம் நாள் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் அறைக்குள் நேரில் சென்று பார்த்தேன். என்னைக் கண்டதும் அவர் பற்றி துடித்தார்.
"நீ ஏன் இங்க வந்த ? நீ பத்திரமாயிரு சாமி" என்று கையெடுத்துக் கும்பிட்டு "வெளியே போ வெளியே போ" என கதறினார். "எனக்கு சாவறத பத்தி பயமில்ல; ஒன்ன அம்போனு விட்டுட்டுப் போறேன; உன்னை யார் சாமி பாத்துக்குவாங்க? அதான் எனக்கு பெரிய கவலயா இருக்கு; ஒன்ன நம்பி சனங்க இருக்காங்க;
நீ பத்திரமா இரு; ரூம விட்டு ஒடனே வெளிய போ " என்று அக்கா அலறி துடித்தார்" என்று தெரிவித்துள்ளார் தொல். திருமாவளவன்.
"ஒருநாளும் எதற்காகவும் அவர் முகம் சுளித்ததில்லை; எவரையும் கடிந்து கொண்டதில்லை. எதுவும் வேண்டுமென எந்நிலையிலும் கேட்டதில்லை. " தயவுசெய்து கல்யாணம் பண்ணிக்கோ தம்பி; அம்மா சதா உன்னை நினைத்து அழுது கொண்டே இருக்காங்க " என்பது மட்டுமே அவரது வழக்கமான ஒரே கோரிக்கை.
கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு நான் வரும்போது தகவலறிந்து, அங்கே வந்து கும்பல்சூழ பரபரப்பாயிருக்கும் என்னைத் தூரமாய் நின்று பார்த்துவிட்டுப் போய்விடுவார். கால்நூற்றாண்டாய் எனக்காக வாழ்ந்த அக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு நெஞ்சை நெருப்பாய் சுடுகிறது" என்று நெகிழ்ச்சியாக எழுதியுள்ளார்.
தனக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அக்கா என்னும் அம்மாவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறேன் என்றும் கூறியுள்ள திருமாவளவன், மக்களின் விழிப்புணர்வுக்காக இதை எழுதியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.